காவிரி நீர்.. தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடகாவிற்கு ஸ்டாலின் கண்டனம்.. அனைத்துக்கட்சி கூட்டம்

கர்நாடக அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த உத்தரவிட்டிருக்கிறார்.

Jul 15, 2024 - 17:43
Jul 18, 2024 - 10:49
 0
காவிரி நீர்.. தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடகாவிற்கு ஸ்டாலின் கண்டனம்.. அனைத்துக்கட்சி கூட்டம்
DMK Stalin Cauvery water issue

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்று கொள்ளாது. காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு ஜூலை 12 முதல் ஜூலை 31 வரையில் நாள் ஒன்றுக்கு 1 டி.எம்.சி (11,500 கன அடி) தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டும் அந்த மாநில அரசு அதனை மறுத்துவருகிறது. மேலும், இதில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடத்திய கர்நாடக முதல்வர் சித்தராமையா தினமும் 8,000 கன அடி நீர் மட்டும் திறந்துவிட முடிவெடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், கர்நாடக அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில்,காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதி ஆணையினையும், உச்ச நீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பினையும், செயல்படுத்த, CWMA மற்றும் CWRC ஆகிய அமைப்புகளை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, 2018ஆம் ஆண்டு ஜூன் முதல் இந்த அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. 

இந்த தீர்ப்புகளின்படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரை சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி நீரைப் பெற்றது. தற்போதைய தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழு (CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டுக்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரினை கணக்கிட்டு 12.07.2024 முதல் 31.07.2024 வரை நாளொன்றுக்கு ஒரு டி.எம்.சி நீரை விடுவிக்க வேண்டும் என்று CWRC அமைப்பு ஆணையிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த ஆணைப்படி தமிழ்நாட்டுக்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த ஆணையை உடனடியாக செயல்படுத்திட தமிழ்நாடு அரசு CWMA அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளது.

இவ்வாறு CWRC ஆணையின்படி நீரை விடுவிக்காத கர்நாடகத்தின் செயல் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும். இன்றைய அளவில் (15.07.2024) கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 75.586 டி.எம்.சி.ஆகும். மேலும், IMD-யின் அறிக்கையின்படி மழை சரியான அளவில் பெய்ய வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையில் வெறும் 13.808 டி.எம்.சி அளவுக்கு மட்டுமே நீர் உள்ளது.

இந்தச் சூழலில், CWRC-யின் ஆணையின்படி வரையறுக்கப்பட்டுள்ள நீரை கர்நாடகா தர மறுப்பது தமிழ்நாட்டு விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். இவ்வாறு, தமிழ்நாட்டுக்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்று கொள்ளாது. 

காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை நாளை (16.07.2024) காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டிட ஆணையிட்டுள்ளேன். இந்தக் கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநர்களின் கருத்துகளைப் பெற்று, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்" என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow