டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு?.. அமெரிக்காவில் பரபரப்பு!
''டிரம்ப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை அறிந்து நிம்மதி அடைகிறேன். இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு படையினரிடம் கேட்டறிந்தேன். நான் முன்பே கூறியதுபோலவே அமெரிக்காவில் வன்முறை சம்பவத்துக்கு ஒருபோதும் இடமில்லை'' என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

வாஷிங்டன்: அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸும், டொனால்ட் டிரம்ப்பும் தொடர் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரசாரத்தின்போது இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கடந்த 10ம் தேதி இருவரும் முதல் நேரடி விவாதத்தில் பங்கேற்றனர். இதில் டிரம்ப் ஆட்சி காலத்தில் செய்த தவறுகளை கமலா ஹாரிஸ் பட்டியலிட்டு பேசினார். அதே வேளையில் கமலா ஹாரிசையும், அதிபர் ஜோ பைடனையும் கடுமையாக தாக்கிய டிரம்ப், கமலாஹாரிசும் , அவரது தந்தையும் மார்க்சிஸ்ட் என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், புளோரிடாவின் வெஸ்ட்பாம் கடற்கரை அருகே தனக்கு சொந்தமான கோல்ப் மைதானத்தில் டொனால்ட் டிரம்ப் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ஏகே 47 துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த மர்ம நபர் டிரம்ப் மீது பலமுறை துப்பாக்கியால் சுட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படையினர் டிரம்பை உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்று, மர்ம நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் அங்கு இருந்து தப்பிச்சென்ற அந்த மர்ம நபரை பின்னர் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் ரியான் வெஸ்லி ரூத் ஹவாய் பகுதியை சேர்ந்தவர் என தகவல் வெளியாகி உள்ளது. அவரிடம் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பேசிய டிரம்ப், ’’நான் மிகவும் நலமுடன் உள்ளேன். எந்த வகையிலும் என்னை வீழ்த்த முடியாது. இதுபோன்ற மிரட்டல்களுக்கு நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன்’’என்று கூறினார்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த அதிபர் ஜோ பைடன், ‘’டிரம்ப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை அறிந்து நிம்மதி அடைகிறேன். இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு படையினரிடம் கேட்டறிந்தேன். துப்பாக்கியால் சுட முயன்ற சந்தேகத்துக்குரிய நபர் கைது செய்யப்பட்டார். முழுமையான விசாரணைக்கு பின்னரே என்ன நடந்தது? என்பது தெரியவரும். நான் முன்பே கூறியதுபோலவே அமெரிக்காவில் வன்முறை சம்பவத்துக்கு ஒருபோதும் இடமில்லை’’என்று தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதாவது டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் பரப்புரையில் பங்கேற்றார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென டிரம்ப்பை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரம்ப் உடனே சுதாரித்துக் கொண்டு விலகினார். ஆனால் துப்பாக்கி குண்டு அவரது காதில் லேசாக உரசிக் கொண்டு சென்றதால் காயம் அடைந்தார்
பாதுகாப்பு படையினர் உடனடியாக டிரம்ப்பை கேடயம்போல் சூழ்ந்து அவரது உயிரை பாதுகாத்தனர். அவரை உடனடியாக அங்கு இருந்து அழைத்து சென்றனர். டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மர்ம நபர் துப்பாக்கியால் குடியரசு கட்சியின் ஆதரவாளர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்கா புலனாய்வு அமைப்பான FBI விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






