'இந்தி கற்றுக் கொள்ளுங்கள்'... கிரிக்கெட் வீரர் நடராஜன் பேச்சு... கொதிக்கும் நெட்டிசன்கள்!
''நடராஜன் கிரிக்கெட்டுக்காக மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டியது இருப்பதால் அவர் இந்தி மொழியை கற்றுக் கொள்ளட்டும். நாங்கள் ஏன் இந்தியை கற்க வேண்டும்?''
சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் டி.நடராஜன் சேலத்தில் தான் படித்த கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்த பல்வேறு நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இதில் அவர் இந்தி மொழி குறித்து பேசிய பேச்சு இப்போது சர்ச்சையாகி உள்ளது.
அதாவது நிகழ்ச்சியில் பேசிய நடராஜன், ''நான் ஐபிஎல்லில் முதன்முறையாக பஞ்சாப் அணிக்காக விளையாடியபோது இந்தி மொழி தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. எனக்கு விளையாட்டு ரொம்ப பிடிக்கும் என்பதால் இதுபோன்ற கஷ்டங்களை தாண்டிதான் விளையாடினேன்.
இதெல்லாம் ஒரு பிரச்சனை என்று நான் ஒதுங்கி இருந்தால் என்னால் எதுவும் செய்திருக்க முடியாது. இந்தி தெரியாததால் தொடக்கத்தில் மற்ற வீரர்களை தொடர்பு கொள்வதில் மிகவும் சிரமம் அடைந்தேன். அப்போது மற்ற வீரர்களுடன் நான் பேச பஞ்சாப் அணியில் இருந்த ஸ்ரீதர்தான் எனக்கு மிகவும் உதவி செய்தார். ஆகவே சரியோ, தவறோ சிறு வயதில் இருந்தே இந்தி மொழியை கற்றுக் கொள்ளுங்கள். மற்ற இடங்களுக்கு செல்லும்போது, தமிழை தவிர மற்ற மொழிகளும் நமக்கு பயன்படும்'' என்று நடராஜன் கூறியுள்ளார்.
நடராஜனின் இந்த பேச்சுக்கு தற்போது ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது. ''இந்தி மொழி குறித்த நடராஜனின் பேச்சு மிகவும் சரியானது. தமிழ்நாட்டை விட்டு மற்ற மாநிலங்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி தொடர்பாக செல்லும்போது, இந்தி தெரிந்து இருந்தால் மிகவும் உதவியாக இருக்கும்'' என்று பாஜகவினரும், பாஜக ஆதரவாளர்களும் தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள், இந்த கட்சிகளுக்கு ஆதரவானவர்கள் நடராஜன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ''நடராஜன் கிரிக்கெட்டுக்காக மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டியது இருப்பதால் அவர் இந்தி மொழியை கற்றுக் கொள்ளட்டும். நாங்கள் ஏன் இந்தியை கற்க வேண்டும்?'' என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
''ஐபிஎல் தொடரில் இந்தியாவுக்கு வந்து விளையாடும் வெளிநாட்டை சேர்ந்த வீரர்களுக்கு ஆங்கிலம்தான் தெரியும். இந்தி தெரியாது. வெளிநாட்டு வீரர்கள் இந்திய வீரர்களுடன் ஆங்கிலத்தில்தான் தொடர்பு கொள்கிறனர். ஆகவே நடராஜன் ஆங்கிலம் கற்றுக் கொண்டு மற்ற வீரர்களை தொடர்பு கொள்ளலாமே'' என்றும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கெனவே மத்திய அரசு இந்தி மொழியை பல்வேறு வகையில் திணித்து வருவதாக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது நடராஜனும் இந்திக்கு ஆதரவாக பேசியுள்ளது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?