India vs England Test Series : 2025ல் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி.. 5 டெஸ்ட் போட்டி தொடர் .. முழு அட்டவணை இதோ!

India vs England Test Series 2025 : இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

Aug 22, 2024 - 22:40
Aug 22, 2024 - 23:07
 0
India vs England Test Series : 2025ல் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி.. 5 டெஸ்ட் போட்டி தொடர் .. முழு அட்டவணை இதோ!
India vs England Test Series 2025

India vs England Test Series 2025 : இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பார்டர் கவாஸ்கர் டிராபி ( Border Gavaskar Trophy) என அழைக்கப்படும் இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் மாதம் 22ம் தேதி தொடங்குகிறது. 2வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ம் தேதியும், 3வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ம் தேதியும், 4வது டெஸ்ட் டிசம்பர் 26ம் தேதியும், 5வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் தேதியும் தொடங்குகிறது.

1992ம் ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. இதேபோல் இந்திய அணி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இதற்கான அட்டவணையை பிசிசிஐ இன்று 'எக்ஸ்' தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை இங்கிலாந்தின் லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. 2வது டெஸ்ட் போட்டி ஜூலை 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

3வது டெஸ்ட் போட்டி ஜூலை 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. 4வது டெஸ்ட் போட்டி ஜூலை 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்திலும், 5வது டெஸ்ட் போட்டி ஜூலை 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை லண்டனில் உள்ள ஓவல்  மைதானத்திலும் நடைபெற உள்ளன.

கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகள் நடந்த நிலையில் 2-2 என்ற கணக்கில் தொடர் சமனானது. 5வது டெஸ்ட் போட்டி கொரோனா தாக்கம் காரணமாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இங்கிலாந்து மண் ஃபாஸ்ட் பெளலிங்குக்கு சாதகமானது. நமது அணியில் முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் என உலகத்தரம் வாய்ந்த ஃபாஸ்ட் பெளலர்கள் உள்ளதால் அடுத்த ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்க இந்திய அணி தயாராக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow