தமிழக வெற்றிக் கழகம் வருகின்ற 2026-ஆம் ஆண்டு தேர்தலுக்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறது. விஜயின் அரசியல் வருகைக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில் அவருக்கு போட்டியாக யார் போட்டியிடுவார் என்ற கேள்வியும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், காமெடி நடிகரும், மருத்துவருமான பவர்ஸ்டார் சீனிவாசன், தமிழகத்தில் விஜய் எங்கு போட்டியிட்டாலும் அவருக்கு எதிராக போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார். இது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் விஜயின் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
போன் செய்த தவெக நிர்வாகி
அதனைத் தொடர்ந்து, மதுரை தமிழக வெற்றிக் கழகத்தின் பி.பி.குளம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற நிர்வாகி பவர் ஸ்டார் சீனிவாசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில், "திரைத்துறையின் உச்ச நட்சத்திரம் ஒருவர் தமிழக மக்களுக்காக பணியாற்ற வருகிறார். நீங்கள் தான் அவருக்கு சப்போர்ட் பண்ணனும் சார்.! நீங்களும் திரைத்துறையில் இருக்குறீங்க.!” என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த பவர் ஸ்டார், “சப்போர்ட் தான். தம்பி பண்றேன்’ என்று கூறியுள்ளார். அதற்கு தவெக நிர்வாகி, “இல்ல சார் நீங்க அவர் எங்க நிக்கிறாரோ எதிர்த்துப் போட்டியிடுவேன் என்று சொல்லி பேட்டி கொடுத்து இருக்கீங்க.!” என்று கூறியுள்ளார்.
பவர் ஸ்டார்: விஜய் திரைத்துறையில் இன்றைக்கு உச்ச நட்சத்திரமாக இருக்கிறார் என்பதை நான் சொல்ல தேவையில்லை? தமிழக மக்களுக்காக வருகிறார்! மக்களுக்கு சேவை செய்ய வருகிறார் என்பதை நான் வரவேற்கிறேன்! போட்டி இருந்தால் தான் தம்பி ஜெயிக்க முடியும்!
தவெக நிர்வாகி: உங்கள மாதிரி திரைத்துறை ஆட்கள் எல்லாம் வரவேற்கணும் சார்.
பவர் ஸ்டார்: திரைத்துறையில் இருக்கிற நாங்க இருவரும் போட்டியிட்டால் மக்கள் விஜயை ஏற்றுக்கொள்வார்கள்! சரியா தம்பி. நீங்கள் வருத்தப்பட வேண்டாம் தம்பி!
தவெக நிர்வாகி: வருத்தப்படல சார்..! நாங்க ஏன் வருத்தப்படணும்.! இன்னைக்கு கருத்துக்கணிப்பில் 2-வது இடம். களத்துக்கே வரல தளபதி அதுக்குள்ள 2-வது இடம். களத்துக்கு வந்துட்டா அவர்தான் முதலிடம் நாங்க ஏன் வருத்தப்படணும்.
பவர் ஸ்டார்: சொல்றத கேளு தம்பி! நமக்குள்ள ஏன் இந்த வாக்குவாதம்?
தவெக நிர்வாகி: வாக்குவாதம் இல்ல சார். என்னுடைய தலைவரை பற்றி நீங்க பேசும்போது உங்களை நாங்கள் மரியாதை குறைவா பேசினோமா.? தரை குறைவாக யாரையும் பேசக்கூடாது என எங்கள் தளபதி எங்களுக்கு சொல்லிக் கொடுத்தது சார்.!
பவர் ஸ்டார்: உங்க தலைவர் எனக்கு தம்பி சரியா.! என்று உரையாடலை முடித்துக் கொண்டார்.
தவெக இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்காத நிலையில் விஜய்க்கு எதிராக போட்டியிடுவேன் என கூறிய நபரை தொடர்பு கொண்டு அவரது தொண்டர்கள் மிரட்டும் பாணியில் பேசுவது நகைப்பை ஏற்படுத்துவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.