திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான எஸ்.வி.சேகர் இன்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருக்கோயில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து திருக்கோயிலில் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்ட அவர் பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களது செல்போனை வாங்கி செல்பி எடுத்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் இதுவரை 24 ஆயிரம் திருக்கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று இருப்பத்தை சுட்டிக்காட்டி பெருமையாக பேசினார். ஆன்மீகத்தையும் அரசியலையும் ஒன்றாக இணைக்க கூடாது என்றும் அது தனது கருத்து என்றும் கூறினார்.
தொடர்ந்து, “பாஜகவில் அண்ணாமலை நீடிப்பது நல்லது அல்ல. அண்ணாமலையால் பாஜக தமிழ்நாட்டில் அகல பாதாளத்தில் சென்று விட்டது. இனி பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி அமைத்தாலும் அந்த கூட்டணி அமைக்கும் கட்சிக்கு கேடாகவும் நஷ்டமாகவும் தான் முடியும். தமிழ்நாட்டில் பாஜகவை அண்ணாமலை சேதப்படுத்தி விட்டார்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் தலைவர்கள், இந்நாள் தலைவர்கள் என எவரையும் விட்டு வைக்காமல் அண்ணாமலை கடுமையாக பேசினார். டெல்லி நிர்பந்தத்தால் எடப்பாடி தற்பொழுது அதனை ஏற்றுக் கொண்டாலும் அதிமுகவின் அடிப்படை தொண்டர்கள் பாஜக கூட்டணியை ஏற்றுக்கொள்வார்களா? என்பது கடினம்.
2026 சட்டமன்ற தேர்தலில் 100 சதவிகிதம் திமுக கூட்டணி தான்வெற்றி அடைய சாத்தியக்கூறுகள் உள்ளது. மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவார். திமுகவே மீண்டும் ஆட்சியை அமைக்கும்” என்று எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் வக்பு சட்டம் நிறைவேற்றியது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், “பாஜகவில் ஒரு முஸ்லிம் கூட நாடாளுமன்ற உறுப்பினராக இல்லை. இவர்கள் எப்படி இஸ்லாமியர்களுக்கு சாதகமாக இருப்பார்கள்? திராவிடம் என்பது தீய வார்த்தை கிடையாது. அது ஒரு நிலப்பரப்பு.
தமிழ்நாட்டில் திராவிடம் என்ற வார்த்தையை கூறும் பொழுது பெருமிதம் ஏற்படுகிறது. ஒரு ஆட்சி சிறப்பாக உள்ளது என்றால் அதை கூறுவதற்கு கூச்சப்படக்கூடாது. பாஜக தேசப்பற்று உள்ளதாக உளறிக்கொண்டு இருக்கிறது. பாஜகவை பொறுத்தவரை ஒன்றிலும் உருப்படாமல் போனாலும் அவருக்கு கவர்னர் பதவி உண்டு.
இதுவே பாஜகவின் அடிப்படை விஷயம். கழுதை கெட்டால் குட்டிச்சுவர் என்ற பழமொழிக்கு ஏற்ப பாஜகவில் ஒரு கவுன்சிலர் ஆக கூட தகுதி இல்லை என்றாலும் அவருக்கு நிச்சயம் கவர்னர் பதவி கிடைக்கும் என்ற மனோபாவம் உள்ள கட்சி பாஜக. அண்ணாமலை எதுவானாலும் கவலை இல்லை. அண்ணாமலை தமிழ்நாட்டில் இல்லாதவரை தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது.
அண்ணாமலை தமிழ்நாட்டில் இருந்தால் திமுகவிற்கு மிகவும் நல்லது. அண்ணாமலையின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினால் என்ன? எந்த கொடி தூக்கினாலும் அவரவர் வீட்டின் முன்பு மட்டுமே அவர்களால் தூக்க முடியும். பாஜகவில் இதுவரை ஆயிரம் பேர் கூட ஒன்று சேரவில்லை. அண்ணாமலை என்றால் பொய் என்று பொருள் ” என்று காட்டமாக விமர்சித்தார்.