அரசியல்

கரூரைத் தொடர்ந்து சேலத்திலும் சோகம்: விஜய் பிரசார கூட்டத்தில் இளைஞர் உயிரிழப்பு!

சேலத்தில் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

கரூரைத் தொடர்ந்து சேலத்திலும் சோகம்: விஜய் பிரசார கூட்டத்தில் இளைஞர் உயிரிழப்பு!
Youth dies at Vijay campaign
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திரண்டிருந்த இந்தக் கூட்டத்தில், எதிர்பாராத விதமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்தது என்ன?

சேலத்தைச் சேர்ந்த வெள்ளிப் பட்டறை தொழிலாளியான சூரஜ் (37) என்பவர் விஜய்யின் பேச்சைக் கேட்பதற்காகக் கூட்டத்தில் பங்கேற்றார். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாகக் கடும் வெயிலில் நின்றிருந்ததால், அவர் திடீரென மயக்கமடைந்து விழுந்துள்ளார். வெயிலின் தாக்கம் காரணமாக அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும், அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி சூரஜ் உயிரிழந்தார். இந்த செய்தி தவெக தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் ஒரு சோகம்

கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கிச் 41 பேர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்தின் வடு மறைவதற்குள்ளேயே, தற்போது சேலத்தில் வெயிலின் கொடுமையால் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.