அரசியல்

மகளிர் கணக்கில் உரிமைத் தொகை ரூ. 5,000 வரவு: தலைவர்களின் ரியாக்ஷன் என்ன?

மகளிர் உரிமைத்தொகையாக ரூ.5,000 வரவு வைக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் ஆதரவும் சிலர் விமர்சனமும் செய்துள்ளனர்.

மகளிர் கணக்கில் உரிமைத் தொகை ரூ. 5,000 வரவு: தலைவர்களின் ரியாக்ஷன் என்ன?
magalir urimai thogai
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இன்று ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பிப்ரவரி மாதத்திற்கான ரூ. 1,000 தொகையுடன், அடுத்த இரு மாதங்களுக்கான முன்பணம் மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பு என மொத்தம் ரூ. 5,000 இன்று காலை பெண்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

ஆதரவுக்கரம் நீட்டும் கூட்டணித் தலைவர்கள்

இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, "பெண்கள் கையில் கொடுக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் வீட்டின் முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்தத் தொகை பெண்களுக்குக் கிடைக்கக்கூடாது என்று சதி செய்தவர்களின் திட்டத்தை முதல்வர் முறியடித்துள்ளார். எதிர்காலத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 2000 ஆக உயர்த்தி வழங்கப்பட இருப்பதும் மகிழ்ச்சியான செய்தி" என்றார்.

அதேபோல், சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில், "தமிழகம் எங்கும் இன்று ரூ. 5,000 என்பதுதான் பேச்சாக இருக்கிறது. காலையிலேயே ஒரு இன்ப அதிர்ச்சியை முதல்வர் கொடுத்துவிட்டார்" என தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் அடுக்கடுக்கான விமர்சனங்கள்

மகளிர் உரிமைத்தொகையாக ரூ.5,000 வரவு வைக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக மட்டுமே இந்தத் தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ. 1,000 தருவதாகக் கூறிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. டீசல் விலை குறைப்பு, கல்விக்கடன் ரத்து போன்ற வாக்குறுதிகளை அரசு மறந்துவிட்டது" என்று சாடியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், "தேர்தலுக்காக மட்டுமே எல்லாவற்றையும் செய்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மத்திய அரசு முடக்கப் பார்ப்பதாகச் சொல்வதில் உண்மை ஏதுமில்லை. இது தர்மத்திற்கு எதிரானது" என்று தெரிவித்துள்ளார்.