கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் ஞானசேகரன் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மாணவியின் புகாரை தொடர்ந்து ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர். இவர் இதுபோன்று பல பெண்களை மிரட்டி துன்புறுத்தியுள்ளதாகவும், அது தொடர்பான வீடியோக்கள் அவரது செல்போனில் இருந்ததாக கூறப்பட்டது.
ஞானசேகரன் கைது
மேலும் கைதான ஞானசேகரன் திமுக நிர்வாகி என்பதால் தமிழக காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை என்றும் சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த நிலையில் சட்டமன்றத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் திமுக நிர்வாகி இல்லை என்றும் அவர் திமுக ஆதரவாளர் மட்டுமே என விளக்கம் அளித்தார்.
மேலும் மாணவியின் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார். இது தொடர்பான வழக்கு நடந்து வரும் நிலையில், ஞானசேகரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் ஞானசேகரனுக்கு எதிராக நில ஆக்கிரமிப்பு புகார்களும் வந்துள்ளன.
தமிழக அரசுக்கு உத்தரவு
இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.மோகன் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன், ஆளும் திமுக நிர்வாகி எனவும், அவருக்கு எதிராக, இதேபோன்ற பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன எனவும் தெரிய வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
திமுக நிர்வாகியாக இருந்த ஞானசேகரனுக்கு எதிரான வழக்குகளை தமிழக காவல்துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால், இந்த வழக்குகளை சிபிஐ-க்கோ, சிறப்பு புலனாய்வு குழுவுக்கோ மாற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபிக் அடங்கிய அமர்வு, ஞானசேகருக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விரிவான விபரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.