தமிழ்நாடு

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. நாளை டாஸ்மாக் கடையடைப்பு!

தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு போராட்டத்தை நடத்த டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. நாளை டாஸ்மாக் கடையடைப்பு!
TASMAC Strike
ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதன்படி, நாளை தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்தை நடத்த டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.

தொடரும் காத்திருப்பு போராட்டம்

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் தற்காலிகப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே இவர்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது. போராட்டத்தின் ஒரு பகுதியாக ஊழியர்கள் அங்கேயே தங்கித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை

கடந்த 5-ஆம் தேதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் போராட்டக் குழுவினரை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அரசுத் தரப்பில் சில விளக்கங்கள் அளிக்கப்பட்ட போதிலும், ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாகச் சுமுகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் திருப்தி அடையாத காரணத்தால், போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகத் தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

வருவாய் பாதிக்கும் சூழல்

நாளை நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டத்தால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் இயங்காத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தினந்தோறும் சராசரியாக 150 கோடி ரூபாய் வரை மது விற்பனை நடைபெற்று வரும் நிலையில், நாளைய போராட்டத்தால் அரசுக்குக் கணிசமான வருவாய் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.