தமிழ்நாடு

சாத்தான்குளம் வழக்கு: 9 காவலர்களுக்கான தண்டனை விவரம் அறிவிப்பு ஒத்திவைப்பு!

சாத்தான்குளம் வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பதை மதுரை மாவட்ட நீதிமன்றம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

சாத்தான்குளம் வழக்கு: 9 காவலர்களுக்கான தண்டனை விவரம் அறிவிப்பு ஒத்திவைப்பு!
Sathankulam Case
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவிப்பதை மதுரை மாவட்ட நீதிமன்றம் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, 10 காவலர்களைக் கைது செய்தது. இதில் உதவி ஆய்வாளர் பால்துரை உயிரிழந்த நிலையில், எஞ்சிய 9 பேர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த மார்ச் 23-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

மருத்துவ அறிக்கை சமர்ப்பிப்பு

குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட காவலர்களின் மனநிலை மற்றும் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி முத்துக்குமரன் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இதன்பின்னர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு கட்டப் பரிசோதனைகளின் அறிக்கை இன்று காலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஏப்ரல் 2-இல் தண்டனை விவரம்

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யக் கூடுதல் காலஅவகாசம் கோரின. அரசுகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி முத்துக்குமரன், தண்டனை விவரங்கள் அறிவிப்பதை ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.