தமிழ்நாடு

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்: 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூடத் தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்: 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!
Tasmac
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடத் தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் அமைதியைப் பேணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்புப் பணிகளைத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் மதுபான விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ஆம் தேதி என மொத்தம் நான்கு நாட்களுக்குத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்கள் மற்றும் உணவகங்களுக்கும் தடை

இந்த உத்தரவின்படி, டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்கள் (Bars) மற்றும் தனியார் ஹோட்டல்களில் இயங்கும் கிளப்புகள் என அனைத்து வகையான மது விற்பனை நிலையங்களும் முழுமையாக மூடப்பட வேண்டும். விதிகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

மது விநியோகத்திற்குத் தடை

மதுபான விற்பனை தடையுடன் மட்டுமல்லாமல், மது தயாரிப்பு நிறுவனங்கள் அந்த நான்கு நாட்களிலும் மதுபானங்களை வாகனங்கள் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தலை ஒட்டிப் பரிசுப் பொருட்கள் அல்லது மது விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்கவும், வாக்குப்பதிவின் போது எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் இருக்கவும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.