50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி... சிக்கியது எப்படி?
விசாரணையில் அந்த பெண்ணுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த ஒரு நபருடன் திருமணம் முடிந்ததும் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்தது.
மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கினார்.
தாராபுரத்தைச் சேர்ந்த வாலிபர். இவருக்கு 35 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் ஆகாததால் இவரது உறவினர்கள் தீவிரமாக பெண் தேடி வந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் ‘அம்பி டேட் தி தமிழ் வே’ என்ற இன்டர்நெட் செயலி மூலம் கொடுமுடியை சேர்ந்த சத்யா (30) என்பவர் பழக்கமானார்.
பின்னர் இவர்கள் இருவரும் பழநி அருகே உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். மணப்பெண் சத்யாவுக்கு தேவையான நகை, புடவை அனைத்தையும் வாங்கி கொடுத்து நன்றாக பார்த்துக் கொண்டனர்.
வாலிபருடன் 3 மாதம் குடும்பம் நடத்தி கொண்டிருந்த சத்யா கூறிய வயதுக்கும், அவரது தோற்றத்திற்கும் பொருத்தம் இல்லாமல் இருந்ததால் அவரது ஆதார் அட்டையை சந்தேகத்தின் பேரில் பார்த்தபோது, கணவர் பெயர் உள்ள இடத்தில் சென்னையைச் சேர்ந்த வேறு ஒருவரின் பெயர் இருந்ததும், வயதும் வித்தியாசமாக பதிவு செய்யப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபரின் குடும்பத்தினர் சத்யாவிடம் விசாரணை செய்தபோது கோபமடைந்த சத்யா, வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினரை மிரட்டி உள்ளார். இதனால் உஷாரான வாலிபர், பெண்ணிடம் சமாதானம் செய்வதுபோல் நைசாக தாராபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் போலீசாரிடம் நடந்த சம்பவங்களை எடுத்து கூறியுள்ளார். விசாரணையில் அந்த பெண்ணுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த ஒரு நபருடன் திருமணம் முடிந்ததும் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்தது.
தொடர்ந்து டிஎஸ்பி, கரூரில் காவல் ஆய்வாளர், மதுரையில் மற்றொரு போலீசாருடனும், கரூரில் ஒரு பைனான்ஸ் அதிபருடனும் என சுமார் 50க்கும் மேற்பட்டோருடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. திருமணம் நடந்த சில மாதங்களிலேயே கணவருடன் தகராறு செய்து கொண்டு நகை பணத்துடன் சத்யா தலைமறைவாகி விடுவது தொடர் கதையாக நீடித்து வந்துள்ளது.
சத்யாவின் திருமண பட்டியலில் திருமணத்திற்கு பெண் தேடும் 40 வயதுக்கு மேற்பட்டோர், திருமணம் ஆன ஆண்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து சத்யாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏராளமான தொழிலதிபர்கள் இவருடன் திருமணம் செய்து நகை பணத்தை இழந்து இருப்பதும், அதை வெளியே சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
What's Your Reaction?