தமிழ்நாடு

என்டிஏ கூட்டணியில் தவெக? "துணை முதல்வர் என்ற பேச்சுக்கே இடமில்லை"- செங்கோட்டையன் பளீச்!

"விஜய் அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததே முதல்வராகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான்" என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

என்டிஏ கூட்டணியில் தவெக?
Sengottaiyan
பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்க்க முயற்சிகள் நடப்பதாகவும், விஜய்க்குத் துணை முதல்வர் பதவி மற்றும் 51 தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெகவின் அரசியல் பயணம் மற்றும் கூட்டணி யூகங்கள் குறித்துத் தனது பார்வையைத் தெளிவுபடுத்தினார்.

துணை முதல்வர் பேச்சுக்கு இடமில்லை

விஜய் என்டிஏ கூட்டணியில் இணைந்தால் அவருக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற தகவல் குறித்துப் பதிலளித்த செங்கோட்டையன், "விஜய் அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததே முதல்வராகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான். எனவே, துணை முதல்வர் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று கூறினார். மேலும், தவெக மற்றும் என்டிஏ கூட்டணி குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வக் கருத்துப் பரிமாற்றமும் நடைபெறவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

மாற்றத்திற்கான அடையாளம் விஜய்

தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் குறிப்பிட்ட செங்கோட்டையன், திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். அந்த மாற்றத்தைக் கொண்டு வரும் திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளதாகவும், அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் திரளுவது தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி என்றும் அவர் புகழ்ந்து பேசினார்.

வேட்பாளர் பலம்

தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் வகையில் தகுதியான வேட்பாளர்களைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே மக்களிடம் இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள ஒரு கட்சியைத் தான் இதுவரை பார்த்ததில்லை என்றும் வியப்பு தெரிவித்தார். டெல்லியில் நடந்த சிபிஐ விசாரணை குறித்துத் கேட்கப்பட்ட கேள்விக்கு, விஜய் உரிய பதில்களை அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.