2- வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்கிறது - அமைச்சர் எ. வ. வேலு
இந்தியாவின் இரண்டாவது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன் தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது என்றும், அதனை ரத்து செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதில் அளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்டுள்ள கட்டணத்தை திரும்ப பெறுமாறு ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறோம் என்றும் நேரில் சென்றும் அது பற்றி வலியுறுத்த உள்ளோம் என்றும் கூறினார். காலாவதியான 13 சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது, இந்த சுங்கச்சாவடிகளை அகற்றகோரி மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பி உள்ளோம் என்றும் அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்தார்.
இந்தியாவின் இரண்டாவது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சாலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக கூறி அமைச்சர் எ.வ.வேலு, 4 ஆண்டுகளில் ஆயிரத்து 584 உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், 858 கோடியில் 25 புதிய ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
முன்னதாக அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் எம்.ஜி.ஆர் பாடலை பாடி தமிழகத்தில் திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை விளக்கினார். எம்ஜிஆரின் முதல் ரசிகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்று கூறினார்.
What's Your Reaction?






