சினிமா

உடை மாற்றும் போது கேரவன் உள்ளே நுழைந்த டைரக்டர்.. மனம் திறந்த அர்ஜூன் ரெட்டி நடிகை!

கேரவனில் உடை மாற்றும் போது திடீரென இயக்குநர் உள்ளே வந்ததாக அர்ஜூன் ரெட்டி பட நடிகை குற்றம் சாட்டியுள்ளது தென்னிந்திய திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடை மாற்றும் போது கேரவன் உள்ளே நுழைந்த டைரக்டர்.. மனம் திறந்த அர்ஜூன் ரெட்டி நடிகை!
ஷாலினி பாண்டே

தெலுங்கில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஷாலினி பாண்டே, இளைஞர்களின் கனவு கன்னியாகவே மாறிப்போனார். ஒரே படத்தில் இப்படியான ஒரு கேர்ள்ஃபிரண்டு வேண்டும் என்று இளைஞர்கள் ஏங்கும் அளவிற்கு மாறிப்போனார் ஷாலினி பாண்டே. என்னத்தான் அர்ஜூன் ரெட்டி திரைப்படம் பெரிய வெற்றிப் பெற்றிருந்தாலும், அவ்வெற்றியை ஷாலினி பாண்டேவால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். 

அர்ஜூன் ரெட்டி படத்திற்கு பிறகு ஷாலினி பாண்டே, மெரி நிம்மோ என்ற இந்தி படத்தில் நடித்த அவர், அதனைத் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார். பிறகு தமிழில் அறிமுகமான ஷாலினி பாண்டே, 2019-ம் ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 100 சதவீதம் காதல் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தமிழில் நடிக்காத இவர், தற்போது தனுஷ் இயக்கி தயாரித்து நாயகனாக நடித்து வரும் இட்லி கடை திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கிரன், அருண் விஜய், பிரகாஷ்ராஜ், சமுத்திக்கனி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில், விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாகத்தான் ஷாலினி பாண்டே நடித்துள்ளார். அண்மையில், டப்பா கார்டெல் வெப்சீரிஸ் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், திரையுலகில் தான் சந்தித்த மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார் ஷாலினி பாண்டே. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், அர்ஜுன் ரெட்டி திரைப்படம் நடித்து முடித்துவிட்டு ஒரு தெலுங்கு திரைப்படத்தில் தான் நடித்ததாகவும், அப்போது தன்னுடைய கேரவனில் உடை மாற்றிக் கொண்டு இருக்கும் போது அந்த படத்தின் இயக்குனர் கதவை தட்டாமலே உள்ளே நுழைந்ததாகக் கூறினார். மேலும், தனக்கு என்ன செய்வது என தெரியாமல் அவரை கண்மூடித்தனமாக திட்டியதாகவும், அதன் பிறகுதான் இந்த திரைத்துறையில் தன்னை காப்பாற்றிக் கொள்ள யார் யாருக்கு எந்த இடத்தை தரவேண்டும் என புரிந்ததாகவும் ஷாலினி பாண்டே கூறினார். ஆனால், அந்த இயக்குநரை தான் திட்டியது தவறு என்றும், இதனால் தன்னுடைய சினிமா வாழ்க்கையே முடிவு பெறலாம் என்றும் சிலர் கூறியதாக ஷாலினி பாண்டே தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், தன்னைத் தானே மாற்றிக் கொண்டதாகவும், தான் நல்ல மனிதர்கள் மற்றும் ஆண்களுடன் பணியாற்றியுள்ளதாகவும், அதே சமயம் பல மோசமான மனிதர்களுடனும் பணியாற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார். 

நடிகை ஷாலினியின் இந்த வீடியோவைத் தொடர்ந்து யார் அந்த தெலுங்கு இயக்குனர்? என்ற கேள்விகளை அவரது ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.