பிரபல யூடியூபரான இர்ஃபான் தனது இர்ஃபான் யூடியூப் சேனலில் பல்வேறு உயர்தர ஹோட்டல்களின் உணவுகள் மற்றும் பிரபலங்களை பேட்டி எடுத்து பதிவிட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ‘எம்புரான்’ திரைப்பட குழுவினருடன் பேட்டி எடுத்து பதிவிட்டிருந்தார்.
அப்போது இவர் மோகன்லாலிடம் கேட்ட கேள்விகள் கடும் விமர்சனத்தை சந்தித்தது. சர்ச்சை நாயகனான இர்ஃபான் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளியிட்டது. விபத்து ஏற்படுத்தியது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி மன்னிப்புக் கேட்டிருந்தார்.
தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் இர்ஃபான் சிக்கியுள்ளார். அதாவது, ரமலான் அன்று தனது காரில் மனைவியுடன் ஏழை, எளிய மக்களுக்கு உணவு, உடை மற்றும் பணம் உள்ளிட்டவற்றை வழங்குவதற்காக சென்றுள்ளார்.
கோபமடைந்த இர்ஃபான்
அப்போது இர்ஃபானும் அவரது மனைவியும் காரில் இருந்த படி சாலையோரம் இருந்த மக்களுக்கு உதவிகளை வழங்கினர். இதனை பார்த்த பலர் காரின் முன் முண்டியடித்து கொண்டு வந்ததுடன் காரின் உள் கையைவிட்டு உதவிகளை வாங்கினார்கள். இதனால் கடுப்பான இர்ஃபான் 'ஏன் அசிங்கமா பண்ணுறீங்க. உங்களுக்காக தான கொண்டு வந்துருக்கோம்' என கோபமாக பேசினார்.
அதுமட்டுமல்லாமல், உதவிகளை வாங்கியவர்களை தனது மனைவியுடன் சேர்ந்து கிண்டல் செய்தும் இருந்தார். இந்த வீடியோவை அவரது யூடியூப் பக்கத்திலும் வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் இர்ஃபானை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். புதுப்பணக்காரன் இப்படி தான் அலப்பறைய கூட்டுவான் என்று பிரபலங்களும் சாடி வருகின்றனர்.
விளக்கம்
இந்த நிலையில் தான் செய்த செயலுக்கு யூடியூபர் இர்ஃபான் விளக்கமளித்துள்ளார். அதில், “முன்னேற்பாடுகள் எதுவும் இல்லாமல் என் மனைவியுடன் காரில் சென்று உதவி செய்ததால் அந்த சூழலை கையாள தெரியவில்லை. கஷ்டப்படுபவர்கள் மீது அக்கறை இல்லை என சிலர் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது.
நானும் கஷ்டப்பட்ட இடத்திலிருந்து வந்தவன் தான். என்னுடைய மனைவி திடீரென அவர்களால் அசவுகரியமாக உணர்ந்தார். அதன் காரணமாகவே கொஞ்சம் டென்ஷனாகி விட்டேன். நான் அப்படி நடந்து கொண்டது பலரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.