சினிமா

ஜி.வி.பிரகாஷ் விவகாரம்.. அவ்ளோ தான் லிமிட்.. திவ்ய பாரதி ஆதங்கம்

ஜி.வி.பிரகாஷ் குடும்ப பிரச்சனைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நடிகை திவ்ய பாரதி தெரிவித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் விவகாரம்.. அவ்ளோ தான் லிமிட்.. திவ்ய பாரதி ஆதங்கம்
நடிகை திவ்ய பாரதி ஆதங்கம்

கடந்த 2021-ஆம் ஆண்டு இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் திவ்ய பாரதி. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து திவ்ய பாரதிக்கு பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் திவ்ய பாரதி அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இவர் சமீபத்தில் அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதற்கிடையே, திவ்ய பாரதியும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் காதலித்து வருவதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது.

 சமீபத்தில், ஜி.வி.பிரகாஷும், சைந்தவியும் தாங்கள் பிரிந்து வாழப்போவதாக தெரிவித்த நிலையில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி தம்பதி பிரிவதற்கு நடிகை திவ்ய பாரதி தான் காரணம் எனவும் தகவல் வெளியானது.

திவ்ய பாரதி ஆதங்கம்

இந்நிலையில், ஜி.வி,பிரகாஷ் மற்றும் சைந்தவி பிரிவுக்கு தான் காரணம் இல்லை என்று நடிகை திவ்ய பாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ள அவர், “எனக்கும் ஜி.வி.பிரகாஷ் குடும்ப பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் நடிகரையோ, திருமணமான நபரையை டேட் செய்ய மாட்டேன். ஆதாரமற்ற வதந்திகள் என் கவனத்தை ஈர்க்கத் தேவையில்லை என்று நம்பி இதுவரை அமைதியாக இருந்தேன். 

இருப்பினும், இது எல்லை கடந்து போகிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன். நான் ஒரு வலிமையான, சுதந்திரமான பெண், நான் வதந்திகளால் வரையறுக்கப்பட மாட்டேன். எதிர்மறையைப் பரப்புவதற்குப் பதிலாக, ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம். எனது எல்லைகளை மதிக்கவும். இந்த விஷயத்தில் இது எனது முதல் மற்றும் இறுதி அறிக்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.