சினிமா

விரைவில் 'துருவ நட்சத்திரம்': ரிலீஸ் குறித்து GVM கொடுத்த அப்டேட்!

'துருவ நட்சத்திரம்' படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் புதிய தகவலை பகிந்துள்ளார்.

விரைவில் 'துருவ நட்சத்திரம்': ரிலீஸ் குறித்து GVM கொடுத்த அப்டேட்!
Dhuruva Natchathiram
நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான ஸ்பை திரில்லர் திரைப்படம் "துருவ நட்சத்திரம்". இந்தப் படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், நிதிச் சிக்கல்கள் காரணமாகப் படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை மாற்றப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாகத் தாமதமாகி வந்தது.

ரசிகர்களின் நீண்ட காலக் காத்திருப்பு

இந்தத் திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தில் இடம்பெற்ற "ஒரெயொரு" மற்றும் "ஹிஸ் நேம் இஸ் ஜான்" போன்ற பாடல்கள் வெளியாகிப் பல மாதங்கள் கடந்தும் இன்னும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளன. படத்தின் டீசர் மற்றும் டிரைலர்கள், படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.

கடைசிக்கட்டச் சவால்கள்

திரையுலகில் தனது 25 ஆண்டுகாலப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இயக்குநர் கவுதம் மேனன் கலந்துகொண்டார். அப்போது மேடையிலேயே ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "துருவ நட்சத்திரம்" ரிலீஸ் குறித்த முக்கியத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

நிதிப் பிரச்சனைகள் குறித்துப் பேசிய கவுதம் மேனன், "நிதிச் சிக்கல்கள் காரணமாகவே இந்தப் படத்தின் ரிலீஸ் இவ்வளவு தாமதமானது. அந்தப் பிரச்சனைகளைச் சமாளிக்கவே எனக்குச் சில ஆண்டுகள் தேவைப்பட்டன. தற்போது அனைத்துக் கடைசிக்கட்டச் சவால்களையும் முடித்துவிட்டேன். இன்னும் இரண்டு வாரங்களுக்குள் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியும் என நம்புகிறேன்" என்று உறுதியளித்தார்.

இயக்கத்தில் இடைவேளை

மேலும் அவர் பேசுகையில், "துருவ நட்சத்திரம்" படத்தை எப்படியாவது திரைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் இருந்ததால், கடந்த சில காலமாகப் புதிய படங்களை இயக்காமல் இருந்ததாக உருக்கமாகத் தெரிவித்தார். கவுதம் மேனனின் இந்த அறிவிப்பு, விக்ரம் ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.