சினிமா

மாதம்பட்டி ரங்கராஜுக்கு டிஎன்ஏ பரிசோதனை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜுக்கு டிஎன்ஏ பரிசோதனை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Madhampatti Rangaraj & Joy Crisilda
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வந்தார். இந்த விவகாரத்தில் மாதம்பட்டி ரங்கராஜின் ‘மாதம்பட்டி பாகசாலா’ நிறுவனத்தின் பெயரையும் அவர் இணைத்திருந்ததால், நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி அந்த நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

மரபணு பரிசோதனைக்கு இருதரப்பும் ஒப்புதல்

இந்த வழக்கின் விசாரணையின்போது, தனது குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்பதை நிரூபிக்க அவருக்கு மரபணு பரிசோதனை (DNA Test) நடத்த வேண்டும் என்று ஜாய் கிரிசில்டா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பும் சம்மதம் தெரிவித்தது. இருதரப்பினரும் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்ததை அடுத்து, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி மரபணு பரிசோதனை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கறிஞர் ஆணையர் நியமனம்

மரபணு பரிசோதனை நடைமுறைகளைச் சீராக மேற்கொள்ள, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தடயவியல் துறை மற்றும் ஆய்வகத்தைத் தொடர்பு கொண்டு பணிகளை ஒருங்கிணைக்க வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நீதிமன்றம் நியமித்துள்ளது. மாதம்பட்டி ரங்கராஜின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து பரிசோதனை செய்த பின், அதன் அறிக்கையைப் பெற்று மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி பி.என். பிரகாஷிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்தியஸ்தம் மற்றும் அடுத்தகட்ட விசாரணை

ஏற்கனவே இந்த விவகாரத்தைச் சுமூகமாகத் தீர்க்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மத்தியஸ்தம் நடைபெற்று வரும் நிலையில், இந்த மரபணு பரிசோதனை அறிக்கை வழக்கில் ஒரு முக்கியத் திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நீதிமன்றம் மார்ச் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.