நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மார்ச் 27-ஆம் தேதி ‘எம்புரான்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் மோகன்லால், பிரித்விராஜ், மஞ்சுவாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆசிர்வாத் சினிமாஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார்.
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘எம்புரான்’ திரைப்படத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் பற்றி மறைமுகக் குறிப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இப்படத்திற்கு வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய மூன்று நிமிட காட்சிகளை நீக்கியதாக படக்குழு தெரிவித்தது.
என்னதான் சர்ச்சைகள் கிளம்பினாலும் ‘எம்புரான்’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. அதாவது, இப்படம் வெளியான ஐந்து நாட்களில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
திரையிடலை நிறுத்திய திரையரங்கம்
இந்நிலையில், ‘எம்புரான்’ திரைப்படத்திற்கு மீண்டும் ஒரு சிக்கல் வந்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பினர் ‘எம்புரான்’ திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து வந்துள்ளனர். இதையடுத்து, பெரியார் அணை குறித்து தவறான கருத்துக்களை பரப்புவதாக அறிந்த பிரபல திரையரங்க நிர்வாகம் ஒன்று ‘எம்புரான்’ படத்தின் காட்சிகளை வெளியிடுவதை நிறுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
மேலும், இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு இல்லாததால் நிறைய காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கண்டன குரல் தெரிவித்து வருவதையடுத்து ‘எம்புரான்’ திரைப்படம் வெளியிடல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.