சினிமா

சர்ச்சைகளுக்கு நடுவில் வசூல் வேட்டை நிகழ்த்தும் ‘எம்புரான்’.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

’எம்புரான்’ திரைப்படம் வெளியான ஐந்து நாட்களில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

சர்ச்சைகளுக்கு நடுவில் வசூல் வேட்டை நிகழ்த்தும் ‘எம்புரான்’.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்
’எம்புரான்’ வசூல் அப்டேட்

கடந்த 2019-ஆம் ஆண்டு நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான 'லூசிபர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ திரைப்படம் மார்ச் 27-ஆம் தேதி உலகம் முழுவதும்  உள்ள திரையரங்குகளில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. 

 இந்த படத்தில் மோகன்லால்,  பிரித்விராஜ், மஞ்சுவாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  ஆசிர்வாத் சினிமாஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். 

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘எம்புரான்’ திரைப்படத்தில்  கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் பற்றி மறைமுகக் குறிப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இப்படம்  தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறியது.

அதுமட்டுமல்லாமல், ‘எம்புரான்’ திரைப்படத்திற்கு வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து,  படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய மூன்று நிமிட காட்சிகளை நீக்கியுள்ளதாக படக்குழு அறிவித்தது. 

வசூல் வேட்டை

இந்நிலையில், ‘எம்புரான்’ திரைப்படத்தின் வசூல் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் வெளியான ஐந்து நாட்களில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. என்னதான் சர்ச்சைகள் கிளம்பினாலும் ‘எம்புரான்’ தொடர்ந்து வசூல் வேட்டை செய்து வருகிறது. 

முன்னதாக ‘எம்புரான்’ திரைப்படம் வெளியான 48 மணிநேரத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.