கடந்த 1984-ஆம் ஆண்டு வெளியான ‘டாப் சீக்ரெட்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமான வால் கில்மர் தனது திறமையான நடிப்பால் 90-களின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தார். தொடர்ந்து, ‘ரியல் ஜீனியஸ்’, ‘டாப் கன்', ‘தி டோர்’, ‘பேட்மேன் ஃபார் எவர்’ போன்ற 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
டாம் குரூஸுடன் இவர் இணைந்து நடித்த ‘டாப் கன்’ திரைப்படம் வால் கில்மருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. மேலும், ‘பேட்மேன் ஃபார் எவர்’ திரைப்படமும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் புகழை தேடி தந்தது.
நடிகர் வால் கில்மர், நடிகை ஜோன் வேலியைத் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். இந்த தம்பதிக்கு மெர்ஸிடிஸ், ஜாக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஹாலிவுட் உலகில் கொடிகட்டிப் பறந்த கில்மர் சில வருடங்களாக நிமோனியா மற்றும் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 65 வயதான வால் கில்மர் இன்று (ஏப்ரல் 2) உயிரிழந்துள்ளார். இதனை அவரது மகள் மெர்ஸிடிஸ் உறுதிப்படுத்தியுள்ளார். வால் கில்மரின் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.