அரசியல்

பாஜக கூட்டு.. EPS-க்கு வேட்டு? வளர்ப்பு மகன் வாக்குமூலம்..! வேகமெடுக்கும் கொடநாடு வழக்கு

பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு செல்லலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார் எடப்பாடி. சும்மா இருக்குமா தி.மு.க? கொடநாடு வழக்கு விசாரணைக்குள் எடப்பாடியை இழுத்துவிட்டு தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது ஆளும் தரப்பு என்பது தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பாஜக கூட்டு.. EPS-க்கு வேட்டு? வளர்ப்பு மகன் வாக்குமூலம்..! வேகமெடுக்கும் கொடநாடு வழக்கு
பாஜக கூட்டு.. இபிஎஸ்க்கு வேட்டு? வளர்ப்பு மகன் வாக்குமூலம்..! வேகமெடுக்கும் கொடநாடு வழக்கு

கன்னித்தீவு கதையாக நீண்டு கொண்டிருந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையில் கடந்த சில நாட்களாக தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது சி.பி.சி.ஐ.டி. சமீபத்தில் கொடநாடு எஸ்டேட் மேனேஜர் நடராஜன், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி ஆகியோரை அழைத்து விசாரித்திருந்தனர். தொடர்ந்து, ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரனை கடந்த மார்ச் 27ம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி அதிரடி காட்டியது.
 
அதன்படி ஆஜராகிவிட்டு வெளியே வந்த சுதாகரனிடம் பேசியபோது, "கிட்டத்தட்ட நாற்பது கேள்விகளை கேட்டாங்க, எனக்குத் தெரிந்த முழுமையான உண்மைகளை பதிலா கொடுத்திருக்கேன். மீண்டும் என்னை விசாரணைக்கு வரச் சொல்லி அதிகாரிகள் எதுவும் சொல்லலை. விசாரணையின் அடுத்தகட்ட மூவ் பற்றி எனக்கு ஐடியா இல்லை" என்றார். 

கொடநாடு வழக்கு விவகாரத்தில் இதுவரை பெரிதாகப் பேசப்படாத சுதாகரனை விசாரணைக்கு இழுத்து CBCID அதிகாரிகள் பதில்கள் வாங்கியிருப்பதை மிக முக்கியமான விஷயமாக  அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கொடநாடு கொலை, கொள்ளை வெறும் க்ரைம் மட்டுமல்ல, இதன் பின்னணியில் அ.தி.மு.க. தொடர்பான வலுவான அரசியல் கணக்குகள் உள்ளதாகவும், அதனால்தான் இந்த கேஸ் சி.பி.சி.ஐ.டி.யின் கைகளுக்கு மாற்றப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அதன் பின்னும் பெரிய வேகமில்லை என்றாலும், கடந்த சில வாரங்களாக இந்த வழக்கு டாப் கியருக்கு மாறியுள்ளதாகவும், அதற்கு  காரணம், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம்தான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

சில வாரங்களாக அ.தி.மு.க. பா.ஜ.க. நெருக்கம் அதிகரிக்கத் துவங்கியுள்ளதுதான் இதன் சூட்சுமமே என்று கூறும் அவர்கள், அங்கே இலையும் தாமரையும் நெருங்க நெருங்க இங்கே கொடநாடு வழக்கின் விசாரணையும் வேகமெடுக்கத் துவங்கியது, ஏர்போர்ட்டில் மகாராஷ்டிரா ஆளுநர் சிபிராதாகிருஷ்ணனோடு எடப்பாடி நடத்திய 25 நிமிட ஆலோசனை, அதன்பின் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தது எல்லாமே அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்தேவிட்டதாகவும், அதற்காக கொடநாடு வழக்கில் அதிரடி மூவ்க்கு பிளான் பண்ணியுள்ளது அரசாங்கம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். 
 
அதன்படி கடந்த அதிமுக ஆட்சியின்போதே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட்ட சயன், மனோஜ் உள்ளிட்டோரின் வழக்கறிஞர் டீம், சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பெண்டிங்கில் இருக்கும் பழைய பெட்டிஷன் ஒன்றை கையில் எடுத்திருக்கிறார்களாம். அந்த பெட்டிஷனில் கொடநாடு குற்ற சம்பவ வழக்கில் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி உள்ளிட்டவர்களையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தனர். 
 
அதன்படி சசி மற்றும் பன்னீரிடம் ஏற்கெனவே சட்டம் ஒழுங்கு காவல்துறை விசாரணை நடத்திவிட்டது. இந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீஸ் எடப்பாடிக்கு சம்மன் அனுப்பி, வரவைத்து, கேள்விகளால் குடைவதன் மூலம் அவரை முன்னிறுத்தி மெகா கூட்டணியை பிம்பப்படுத்தும் பாஜகவின் திட்டத்தை தவிடுபொடியாக்க அரசாங்கம் பலே திட்டம் தீட்டுகிறதாம்.

ஜெயலலிதா மீது விசுவாசமாக இருப்போர் வாக்கு வங்கியை எடப்பாடிக்கு எதிராக மாற்றுவதோடு, அதையெல்லாம் தாண்டி 'கொடநாடு வழக்கில் தி.மு.க. அரசு மவுனம் காப்பதன் மர்மம் என்ன? என்று கடந்த சில வருடங்களாகவே மக்கள் மத்தியிலிருக்கும் விமர்சன பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பதே தி.மு.க.வின் கணக்கு என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள். 

இதுதவிர, பன்னீர் செல்வமும் சி.பி.சி.ஐ.டி.யால் விசாரிக்கப்படலாம் அவரிடமிருந்து பெறப்படும் முக்கிய தகவல்கள் எடப்பாடியாருக்கு செக் வைக்கும் வகையில் அமையலாம் என்று கூறப்படுகிறது. காரணம், பாஜகவுடன் கூட்டணியை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்ட எடப்பாடி, தன்னை அதிமுகவில் மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை என்று கூறியிருப்பது பன்னீரை கொதிக்க வைத்துள்ளதாம். இவை எல்லாம் 2026 தேர்தலில் தி.மு.கவுக்கு சாதகமாக அமையலாம் என்பது தி.மு.கவின் திட்டம் என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்தாக இருக்கிறது. 

கூடுதல் தகவலாக 'கொடநாடு சம்பவ காலங்களில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் பதவிகளில் இருந்த சில போலீஸ் அதிகாரிகளின் மனைவிகளையும் விசாரணைக்கு அழைக்க விரைவில் பெட்டிஷன் பறக்கலாம்' என்று முக்கிய தகவல் ஒன்று வருகிறது. இப்பெண்களுக்கும் அதிமுக முக்கிய புள்ளிகளின் மனைவியருக்கும் மிக நெருக்கமான நட்பு இருப்பதாக சி.பி.சி.ஐ.டி கண்டறிந்து, மேலிடத்தில் விசாரணைக்கு ஓகே வாங்கியுள்ளதாம். எனவே சி.பி.சி.ஐடியின் அடுத்த சம்மன் யார் முகவரிக்கு? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை எகிறவிட்டுள்ளது.