Budget 2025: பீகாருக்கு பிரியாணி விருந்து... தமிழ்நாட்டுக்கு வெறும் பாயாசம்... பட்ஜெட் தகராறு!

தேர்தல் களமான பீகாருக்கு, மத்திய பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், பட்ஜெட் உரையின் நடுவே, திருக்குறளை மட்டும் வாசித்து அதன் பொருள் கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டுக்கு எந்தவொரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

Feb 1, 2025 - 16:52
Feb 1, 2025 - 17:23
 0
Budget 2025: பீகாருக்கு பிரியாணி விருந்து... தமிழ்நாட்டுக்கு வெறும் பாயாசம்... பட்ஜெட் தகராறு!
பீகாருக்கு தனி கவனிப்பு

மத்திய பாஜக கூட்டணி ஆட்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பங்கு முக்கியமானது. இதனால் அவரை திருப்திப்படுத்தவும், ஆட்சியை காப்பாற்றவும் பீகாருக்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக மத்திய பட்ஜெட்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பீகாருக்கு அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுளன. அதன்படி, பீகாரில் தேசிய உணவு பதப்படுத்துதல் மையம் நிஃப்டம் ( NIFTEM) அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.

அதேபோல், மக்கானா  எனப்படும் தாமரை விதை உற்பத்திக் கூடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஐஐடி பாட்னாவில் உள்கட்டமைப்பு, விடுதி வசதிகளை விரிவுபடுத்துவதாகவும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநிலத்தின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, பீகாரில் பசுமைவழி விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், பாட்னா விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பீகார் புதிய விமான நிலைய அறிவிப்பை அவர் வாசித்த போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக எதிர்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

மேலும், மேற்கு கோசி கால்வாய் திட்டத்திற்கு நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் 50,000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயனடைவார்கள், அவர்களுக்கு பாசன நீர் கிடைக்கும். இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், பீகார் மாநிலத்தின் பாரம்பரிய சேலையை அணிந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சேலை பீகாரை சேர்ந்த துலாரி தேவி என்பவர் பரிசாகக் கொடுத்ததாகும். 

முன்னதாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையினை தொடங்கும்போது தெலுங்கு கவிதைக் கூறிய நிதி அமைச்சர், இடையே திருக்குறளையும் குறிப்பிட்டார். தெலுங்கு எழுத்தாளர் குருஜாடா அப்பாராவின் 'தேசமாண்டே.." கவிதையுடன் பட்ஜெட் உரையை தொடங்கினார். "நாடு என்பது மண் அல்ல, நாடு என்பது மனிதர்கள்" என்பது அந்தக் கவிதையின் பொருள் ஆகும். வழக்கமாக திருக்குறளை கூறி பட்ஜெட் உரையைத் தொடங்கும் நிர்மலா சீதாராமன், இந்த முறை திருக்குளைக் கூறி தொடங்காதது கேள்வியை எழுப்பியது. 

ஆனால், பட்ஜெட் உரைக்கு நடுவில் அவர் திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டினார். "வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி" எனும் அந்த திருக்குறளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டியதும், எம்.பிக்கள் மேசையைத் தட்டி வரவேற்பு தெரிவித்தனர். செங்கோன்மை அதிகாரத்தில் உள்ள இந்தக் குறளின் பொருள், "உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் நலமுடன் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது." என்பதாகும். 

பட்ஜெட் உரையின் போது திருக்குறளை மட்டும் சுட்டிக் காட்டியா நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டுக்காக எந்தவொரு திட்டத்தையும் அறிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ட்வீட் செய்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ”மத்திய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே?” என பதிவிட்டுள்ளார். அதேபோல், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும், பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow