Pushpalatha Rajan: பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்.. சோகத்தில் திரையுலகம்

Actress Pushpalatha Rajan Death : பழம்பெரும் நடிகையான புஷ்பலதா உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Feb 5, 2025 - 10:51
Feb 5, 2025 - 11:54
 0
Pushpalatha Rajan: பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்.. சோகத்தில் திரையுலகம்
புஷ்பலதா

Actress Pushpalatha Rajan Death: கடந்த 1958-ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'செங்கோட்டை சிங்கம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை புஷ்பலதா. இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டுமல்லாமல் துணை கதாபாத்திரங்களிலும்  100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

நல்வரவு, ராமு, தாயே உனக்காக, நானும் ஒரு பெண், கற்பூரம், ஜீவனாம்சம், பணமா பாசமா, தீர்க்க சுமங்கலி, திருமலை தெய்வம், சிட்டுக்குருவி, பகலில் ஒரு இரவு, ரத்தபாசம் உள்ளிட்ட பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். 70-80 காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்த புஷ்பலதா, ரஜினி, கமல் உள்ளிட்ட பலரின்  படங்களில்  அம்மா, மாமியார் போன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

1963-ஆம் ஆண்டு 'மெயின் பி லட்கி ஹூன்' என்ற ஹிந்தி படத்தில் நடித்த இவர் 'நர்ஸ்' என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார். நடிகை புஷ்பலதா 'நானும் ஒரு பெண்’ திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜனுடன்(AVM Rajan) இணைந்து நடித்த போது இருவரும் காதலித்துப் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர், கிறிஸ்தவ மத போதகராக மாறிய ஏ.வி.எம்.ராஜனுடன் இணைந்து கிறிஸ்தவ  ஊழியம் செய்து வந்தார். 

இந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக நடிகை புஷ்பலதா(Pushpalatha Raja) நேற்று காலமானார். 86 வயதான இவர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். நடிகை புஷ்பலதாவின் இறுதி அஞ்சலி நாளை (பிப். 5)  காலை 11 மணிக்கு ராயப்பேட்டை டி.பி.எம் ஆலயத்தில் வைத்து நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் சமூக வலைதளத்தின் மூலம் புஷ்பலதாவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow