தமிழக கபடி வீராங்கனைகளுக்கு பஞ்சாப்பில் நடந்தது என்ன..? வெளியான பகீர் தகவல்..!
பஞ்சாப் மாநிலத்தில் தாக்குதலுக்கு உள்ளான தமிழக கபடி வீராங்கனைகள், சென்னை திரும்பிய நிலையில், அங்கு நடந்தது குறித்து அவர்கள் சொன்ன தகவல் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் 2024-2025ம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கபடி போட்டிகள் நடைபெற்றன. இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில், தமிழ்நாட்டில் இருந்து பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் இருந்தும் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தப் போட்டி தொடங்கியது முதலே, தமிழக பல்கலைக்கழக அணிகளுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. தமிழக பல்கலைக்கழக அணிகளுக்கு எதிராக விளையாடிய, வடமாநில பல்கலைக்கழங்களுக்கே நடுவர்கள் ஆதரவாக செயல்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 24ம் தேதி நடைபெற்ற போட்டியில், அன்னை தெரசா பல்கலைக்கழக வீராங்கனையை, தர்பங்கா பல்கலைக்கழக வீராங்கனைகள் தாக்கியுள்ளனர். இதனை தடுக்கச் சென்ற தமிழக வீராங்கனைகள், பயிற்சியாளர் உட்பட அனைவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக, உடனடியாக தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், தமிழக வீராங்கனைகள் அனைவரும், ரயில் மூலமாக சென்னை வந்து சேர்ந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், பஞ்சாப்பில் நடந்த சம்பவம் குறித்து விவரித்தனர்.
போட்டியின் போது, ரெய்டு சென்ற அன்னை தெரசா பல்கலைக்கழக மாணவியை, தர்பங்கா வீராங்கனைகள் தான் முதலில் தாக்கினர். நாங்கள் எல்லோரும் அதனை தடுக்க தான் சென்றோம், ஆனால், எங்களையும் பொண்ணுங்கன்னு கூட பார்க்காம அங்க இருந்த வாட்ச்மேன் உட்பட எல்லோரும் தாக்கியதாக கூறினர். அதேபோல், பயிற்சியாளரை தனியாக ரூமிற்குள் அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தியதாகவும் கபடி வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய அளவில் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியில், மாணவிகளின் பாதுகாப்பை கூட உறுதி செய்யாத இந்தச் சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடுவர்களின் ஒருதலைபட்சமான முடிவு, வீராங்கனைகள் முதல் பயிற்சியாளர் வரை அனைவர் மீதும் கொடூர தாக்குதல் என, தமிழக வீராங்கனைகளுக்கு மிக மோசமான அனுபவமாக அமைந்துள்ளது இப்போட்டிகள். இருப்பினும் சரியான நேரத்தில் மாணவிகளை பத்திரமாக மீட்டு, அவர்களை சென்னைக்கு அழைத்து வந்துள்ளது தமிழக அரசு. இனிமேலாவது இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே, விளையாட்டு ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
What's Your Reaction?