இஸ்ரேல்-காசா போர் நிறுத்த ஒப்பந்தம்.. கொண்டாட்டத்தில் பாலஸ்தீன மக்கள்
காசாவில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வந்த போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமான இஸ்ரேலியர்கள் உயிரிழந்த நிலையில் 250-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக சிறைப்பிடித்தனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் பழிவாங்கும் நோக்கில் ஹமாஸ் அமைப்பை குறிவைத்து காசா மீது தாக்குதல் நடத்தியது. இதில் இதுவரை 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
15 மாதங்களுக்கு மேலாக நீடித்த இஸ்ரேல்- காசா போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வந்தன. ஆனால், இவை தோல்வியில் முடிவடைந்தது. இதனிடையே, அமெரிக்க அதிபராக ஜனவரி 20-ஆம் தேதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக இஸ்ரேல்- காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தை இறுதி வடிவம் பெறும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாகவும் இஸ்ரேல் அளித்த வரைவு ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் காரணமாக 15 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த இஸ்ரேல்– காசா இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தத்தை தொடர்ந்து ஹமாஸ் பிடியில் சிக்கி இருந்த பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போர் நிறுத்த அறிவிப்பு காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காசாவில் போரினால் பல இடங்கள் சேதமடைந்துள்ளது. பெரும்பாலானோர் காசாவில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். மேலும், உணவு, எரிபொருள், மருந்து மற்றும் தங்குமிடம் ஆகியவற்றின் கடுமையான பற்றாக்குறை காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை வரவேற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், “காசாவில் பிணைக்கைதிகள் விடுதலை ஒப்பந்தம் மற்றும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். இது காசா மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான மனிதாபிமான உதவிகளை வழங்க வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்கவும், போர் நிறுத்தம் செய்யவும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர பாதைக்கு திரும்பவும் நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்தோம்” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்துப் பேசிய இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஒப்பந்தத்தின் இறுதி விவரங்கள் இன்னும் ஆராயப்பட்டு வருகின்றன என்றும் இதை ஊக்குவித்ததற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.
What's Your Reaction?