உலகம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறை!
Imran Khan and his wife Bushra Bibi sentenced to 17 years in prison
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு, தோஷகானா-2 ஊழல் வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. ராவல்பிண்டியில் உள்ள அதியாலா சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஷாரூக் அர்ஜுமந்த் இந்தத் தீர்ப்பை வழங்கினார். இருவருக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனைக்கான சட்டப் பிரிவுகள்

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, இம்ரான் கான் மற்றும் புஷ்ரா பீபி ஆகியோருக்கு இரண்டு வெவ்வேறு பிரிவுகளின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டம் (Prevention of Corruption Act): இதன் கீழ் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் தண்டனைச் சட்டம் பிரிவு 409: அரசு ஊழியராக இருந்து நம்பிக்கைத் துரோகம் செய்ததற்காக, இதன் கீழ் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதிகார துஷ்பிரயோகம்

இந்த 'தோஷகானா-2' வழக்கு, இம்ரான் கான் 2021-ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவிற்குப் பயணம் மேற்கொண்டபோது, சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானால் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு வழங்கப்பட்ட விலையுயர்ந்த 'பல்கேரி' வைர நகை செட் தொடர்பானது. இந்த செட்டில் நெக்லஸ், வளையல், மோதிரம் மற்றும் கம்மல் ஆகியவை இருந்தன.

அரசு விதிகளின்படி, வெளிநாட்டுப் பயணங்களின் போது கிடைக்கும் விலையுயர்ந்த பரிசுகளை அரசு கருவூலமான 'தோஷகானா'வில் ஒப்படைக்க வேண்டும். ஆனால், இந்த நகை செட்டின் உண்மையான மதிப்பு சுமார் 7.15 கோடி ரூபாய் (பாகிஸ்தான் ரூபாய் மதிப்பீடு) இருந்தும், அவர்கள் ஒரு தனியார் நிறுவனம் மூலம் அதன் மதிப்பை வெறும் 58 லட்சம் ரூபாய் எனக் குறைத்துக் காட்டி, அரசுக்கு வெறும் 29 லட்சம் ரூபாய் மட்டும் செலுத்தி அந்த நகைகளைச் சொந்தமாக்கிக் கொண்டனர்.

இதன் மூலம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, செப்டம்பர் 2024-ல் புலனாய்வு அமைப்பான எஃப்.ஐ.ஏ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.

அரசியல் பின்னடைவும் தற்போதைய சிறை நிலையும்

இம்ரான் கான் ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் உள்ளார். அவர் ஏற்கனவே வேறொரு 190 மில்லியன் யூரோ ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது மனைவி புஷ்ரா பீபியும் அதே வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே முதல் தோஷகானா வழக்கில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த இரண்டாவது வழக்கில் விதிக்கப்பட்டுள்ள தண்டனை, இம்ரான் கானின் அரசியல் எதிர்காலத்திற்கு மேலும் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. முன்னதாக, 'இம்ரான் கான் சிறையில் கொல்லப்பட்டார்' என்ற தகவல் பரவிய நிலையில், பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அதனை மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.