நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற கோரி மனு தாக்கல்.. அபராதம் விதித்த நீதிமன்றம்
Rowdy Nagendran : தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி, நாகேந்திரன் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் இரு நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்வதை ஏற்க முடியாது எனக்கூறி நீதிபதிகள் அபராதம் விதித்தனர்.
Rowdy Nagendran : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரன் அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உட்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகேந்திரனுக்கு சில ஆண்டுகளுக்கு முன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் உடல்நல குறைவு ஏற்பட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி, வழக்கறிஞர் ஹமீது இஸ்மாயில் சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி எம் .எஸ் ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வில் முறையீடு செய்தார்.
அப்போது, சிறையில் இருக்கும் நாகேந்திரனுக்கு சில நாட்களுக்கு முன் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க வேலூர் சிறைத்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என கோரினார்.
முறையீட்டை கேட்ட நீதிபதிகள், தற்போது நாகேந்திரனுக்கு சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், அவசர வழக்காக விசாரிக்க முடியாது என தெரிவித்தனர். மேலும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரிய மனுவை பட்டியலிடுவது தொடர்பாக நீதிமன்ற பதிவாளரை அணுக உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு பட்டியலிடப்பட்டால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
இந்நிலையில், நாகேந்திரன் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளதால் அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி, நாகேந்திரன் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், இதே கோரிக்கையுடன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதாகவும், அந்த மனு மீதான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து, ஒரே கோரிக்கையுடன் இரு நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்வதை ஏற்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
What's Your Reaction?