மகளிர் டி20 உலக கோப்பை.. இந்திய அணி அபார வெற்றி.. தாயகம் திரும்பிய வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு
மலேசியாவில் நடைபெற்ற மகளிர் டி20 உலக கோப்பையை கைப்பற்றி தாயகம் திரும்பிய வீராங்கனை கமலினிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் U19 மகளிர் டி20 உலக கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர்களில் 82 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
அதிகபட்சமாக மெய்கே வான் வூர்ஸ்ட் 23 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் கோங்கடி திரிஷா 3 விக்கெட்களையும், வைஷ்ணவி சர்மா, ஆயுஷி ஷுக்லா, பருணிகா சிசோடியா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஷப்னம் ஷகீல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து, 83 ரன் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 11.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதில், இந்திய வீராங்கனை கமாலினி எட்டு ரன்களில் வெளியேறினார். மேலும், கோங்கடி திரிஷா 44, சானிகா சால்கே 26 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை உரித்தாக்கினர். மகளிர் டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்தது. இவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆட்டநாயகி, தொடர்நாயகி விருதை கோங்கடி திரிஷா வென்றார்.
இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்று தமிழகம் திரும்பிய வீராங்கனை கமலினிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் பேசியதாவது, தென்னாப்பிரிக்கா அணியில் அனைவரும் சிறப்பாக இருந்தார்கள். அந்த அணியின் கேப்டன் எனது தோழியாக இருந்தார். செமி பைனலில் எங்களது அணியின் கோச் நீதான் சென்று விளையாட்டை முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அப்பொழுது 50 ரண்களை கடந்து அடித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. முதலில் என்னை தேர்ந்தெடுத்து அனுப்பிய தமிழக கிரிக்கெட் கவுன்சிலுக்கு நன்றி. இதில் வெற்றி பெற வேண்டும் என்றால் கடின உழைப்பு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு படியாக முன்னேறி செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.
What's Your Reaction?