ரத சப்தமி என்பது தை அமாவாசை நாளை அடுத்த ஏழாவது நாளில் கொண்டாடப்படுவதாகும். இந்த நாள் சூரியக் கடவுளின் பிறந்த நாளாக கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. சூரியன் தெற்கு நோக்கிய தட்சிணாயனம் பயணத்தை முடித்துக் கொண்டு ரத சப்தமி அன்று வடக்கு நோக்கி உத்தராயணம் பயணப்படும் தினமே ரத சப்தமி ஆகும்.
இது வசந்த காலத்தின் ஆரம்பமாகவும், அறுவடை காலத்தின் தொடக்கமாகவும் உள்ளது. ரத சப்தமியை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அத்தி வரதர் கோயில் என அழைக்கப்படும் வரதராஜ பெருமாள் கோவிலில் ரதசப்தமி உற்சவம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
ரத சப்தமி உற்சவத்தை ஒட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து சிகப்பு பட்டு உடுத்தப்பட்டது. தொடர்ந்து, மஞ்சள் நிற செண்பகப்பூ, மல்லிகைப்பூ போன்ற மலர் மாலைகள் திரு ஆபரணங்கள் அணிந்து தங்க சூரிய பிரபை வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்னர் மேளதாள வாத்தியங்கள் ஒலிக்க, வேத மத்திரங்கள் முழங்க மாட வீதிகளில் வரதராஜ பெருமாள் திருவீதி உலா வந்தார். சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா வந்த வரதராஜ பெருமாளுக்கு வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கி வழிபட்டு சென்றனர்.