Budget 2025: மத்திய பட்ஜெட்டில் கல்வி, மருத்துவத்துக்கு என்னென்ன அறிவிப்புகள்..? முழு விவரம் இங்கே!
மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 75 ஆயிரம் இடங்கள் சேர்க்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் தொடர்பான அறிவிப்புகளையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
Union Budget : 2025-2026 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், கல்வி, மருத்துவம் உள்ளிட்டவை தொடர்பாக மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி மாணவர்களுக்கு தாய்மொழியிலேயே டிஜிட்டல் கல்வி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், பாரத் நெட் திட்டம் மூலம், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேநிலைப் பள்ளிகளுக்கு பிராட்பேண்ட் இணைய வசதி உறுதி செய்யப்படும் எனக் கூறியுள்ளார். அதேபோல், மருத்துவ கல்லூரிகளில், அடுத்த ஆண்டு பத்தாயிரம் புதிய இடங்கள் ஏற்படுத்தப்படும் எனவும், அடுத்த 5 ஆண்டுகளில் 75 ஆயிரம் மருத்துவ இடங்கள் சேர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், நாடு முழுவதும் 23 ஐஐடிக்கள் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கல்வித்துறையை போல, மருத்துவத்துறைக்கும் சில முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 36 உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் தொடர்பான அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. அதன்படி, புற்றுநோய் உட்பட இன்னும் பிற அரிதான நோய்களுக்கான 36 வகையிலான உயிர் காக்கும் மருந்துகளுக்கு, வரி விலக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.அதேவேளையில் உயிர்காக்கும் 6 மருந்துகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், புற்றுநோய் சிகிச்சை மைய வசதி ஏற்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த ஹீல் இந்தியா என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்.AI தொழில்நுட்ப ஆய்வு தொடர்பாக 3 புதிய மையங்கள் அமைக்க 500 கோடி ஒதுக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
What's Your Reaction?