அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்கும் டிரம்ப்.. உற்சாகத்தில் ஆதரவாளர்கள்
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று இரவு பதவியேற்க உள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். இதில் டொனால்ட் டிரம்ப் பெரும்பான்மை பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இன்று இரவு இந்திய நேரப்படி 10.30 மணிக்கு அமெரிக்காவின் 47-வது அதிபராக வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் அரங்கில் பதவியேற்கிறார்.
டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்பதையொட்டி அவரது ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழா கேபிடல் கட்டிட வளாகத்தின் திறந்தவெளியில் நடைபெறுவது வழக்கம். ஆனால் இன்று கடும் குளிர் நிலவும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டதால் பதவியேற்பு நிகழ்ச்சி கேபிடல் கட்டிடத்தின் ரோட்டுண்டா அரங்கில் நடத்தப்படும் என டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார்.
டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க ஏற்கெனவே லட்சகணக்கில் டிக்கெட் வழங்கப்பட்ட நிலையில் பதவியேற்பு விழா நிகழ்ச்சி உள்அரங்குக்கு மாற்றப்பட்டதால் கேபிடல் ஒன் விளையாட்டு அரங்கில் நேரடி ஒளிப்பரப்பு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதிய அதிபராக பதவியேற்கும் டிரம்பிற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிரமானம் செய்து வைக்கிறார். இதையடுத்து, துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் பதவியேற்கிறார். இதன் பின்னர் டொனால்ட் டிரம்ப் தொடக்க உரையாற்றுவார்.
டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு தலைவர்கள் சிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி உட்பட பல நாடுகளின் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜோ பைடன், கமலாஹாரிஸ், எலான் மஸ்க், ஜெப் பெசாஸ், மார்க் ஜூகர்பெர்க் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இந்தியாவில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார். மேலும், தொழிலதிபர் முகேஸ் அம்பானியும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
பதவியேற்பு விழாவை தொடர்ந்து அதிபர், துணை அதிபர் விருந்தினர்களுக்கு கேபிடல் கட்டிட அரங்கில் நாடாளுமன்ற கூட்டுக் குழு சார்பில் மதிய விருந்து நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய அதிபராக பதவியேற்றபின் வெள்ளை மாளிகை திரும்பும் டிரம்ப் முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவார். பின்னர் சில உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. வாஷிங்டனில் உள்ள நேஷனல் தேவாலயத்தில் நாளை நடைபெறும் சிறப்ப பிரார்த்தனை நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?