யுஜிசி வரைவு விதிமுறைகளை எதிர்த்து ஆலோசனை.. உயர்கல்வித் துறை அமைச்சர்கள் பங்கேற்பு

பல்கலைக்கழக மானிய குழுவின் புதிய விதிமுறைகளை எதிர்த்து கர்நாடகா மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

Feb 5, 2025 - 12:16
 0
யுஜிசி வரைவு விதிமுறைகளை எதிர்த்து ஆலோசனை.. உயர்கல்வித் துறை அமைச்சர்கள் பங்கேற்பு
யுஜிசி

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தமிழகத்தில் துணை வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான குழுவில், பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள், தமிழக அரசின் பிரதிநிதி ஒருவர் மற்றும் ஆளுநர் தரப்பில் ஒருவர் இடம்பெறுவர். இந்த குழு விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியான மூன்று பேரின் பெயர்களை ஆளுநருக்கு பரிந்துரைக்கும், அதில் ஒருவரை ஆளுநர் நியமிப்பது வழக்கம். 

இந்த சூழலில், துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழு  பிரதிநிதி ஒருவரை சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு பிறப்பித்திருந்தார். துணைவேந்தர் நியமனத்தில், பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயம் என்ற நிலையில் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழு பிரதிநிதி ஒருவர் சேர்க்கப்பட வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று தமிழக அரசு தெரிவித்தது.

இதையடுத்து, துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழு அமைப்பது தொடர்பாக புதிய விதிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு தயாரித்தது. அதில், பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் தேடுதல் குழுவில் ஆளுநரால் நியமிக்கப்படுபவர் தேடுதல் குழுவின் தலைவராக இருப்பார். பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் அல்லது செனட் அமைப்பு சார்பில் ஒருவர் இடம் பெறுவார். இதோடு பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினரும் தேடுதல் குழுவில் இடம் பெறுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகள், பல்கலைக்கழக மானிய குழுவின் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

இந்நிலையில், பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டுள்ள வரைவு அறிக்கை தொடர்பாக கர்நாடகா மாநில அரசு உயர் கல்வி அமைச்சர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பங்கேற்க உள்ளார். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பாக கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மாநிலங்கள் அளிக்கக்கூடிய கருத்துக்களை விரிவான அறிக்கையாக தயாரித்து கர்நாடக மாநில அரசு  மத்திய அரசுக்கு வழங்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow