மூதாதையர் வீட்டை தேடும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா.. காரணம் என்ன?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தனது மூதாதையர் வீட்டினை தேடி வருவதாக கூறப்படுவது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள சஞ்சீவ் கண்ணா 14 மே 1960ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் டெல்லி பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றவர். இவரது தந்தை தேவ்ராஜ் கண்ணா டெல்லி உயர்நீதிமன்றத்தில் 1985ஆம் ஆண்டில் நீதிபதியாக இருந்தவர். இவருடைய தாயார் டெல்லியில் உள்ள கல்லூரியில் இந்தி பேராசிரியராக இருந்தவர்.
கடந்த 1983இல் தன்னை வழக்கறிஞராக பார் கவுன்சிலில் சஞ்சீவ் கண்ணா பதிவு செய்துக்கொண்டார். இவர் அரசியலமைப்புச் சட்டம், வரிவிதிப்பு, நடுவர் மன்றம், வணிகச் சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் சட்டம் ஆகியவற்றில் சிறந்த அனுபவம் உள்ளவர்.
நீண்ட காலமாக வருமான வரித் துறையின் மூத்த வழக்கறிஞராக இருந்த கண்ணா, 2005ம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கூடுதல் வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டு பல கிரிமினல் வழக்குகளில் வாதிட்டுள்ளார். ஜனவரி 18ஆம் தேதி, 2019ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய சஞ்சீவ் பல முக்கிய தீர்ப்புகளில் ஒரு அங்கமாக இருந்திருக்கிறார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கம், தேர்தல் பத்திரங்கள் திட்டம், டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் ஜெக்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இடம்பெற்றிருந்தவர் தான் நீதிபதி சஞ்சீவ் கண்ணா.
உச்சநீதிமன்றத்தின் 51ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட சஞ்சீவ் கண்ணா, இதற்கு முன்பு எந்த ஒரு நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக இருந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் உள்ள அவருடைய பூர்வீக வீட்டினை தேடிவருகிறார். தனது மூதாதையருடனான அந்த இடத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ள போதிலும், சஞ்சீவ் கண்ணா தனது தேடுதலை நிறுத்தவில்லை.
தனது மூதாதையரான சரவ் தயாள், 1919ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பந்தமான காங்கிரஸ் கமிட்டியில் இடம்பெற்றுள்ளது. அப்போது சரவ் தயாள், ஜாலியன் வாலாபாக் அருகே கத்ராஷேர் சிங்கில் ஒரு வீட்டை வாங்கியிருக்கிறார்.
1970ஆம் ஆண்டு சரவ் தயாள் மறைந்த பிறகு இந்த வீட்டை விற்றதாக கூறப்படுகிறது. இந்த வீட்டைத்தான் நீதிபதி சஞ்சீவ் கண்ணா கண்டுபிடிக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?