ஏழு பேர் உயிரிழப்புக்கு திமுக அரசுதான் காரணம்.. எடப்பாடி பழனிசாமி ஆதங்கம்!
அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே திருவண்ணாமலையில் ஏழு பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்து விட்டதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில், கனமழை வெளுத்து வாங்கி வந்தது. அப்போது டிசம்பர் 1ம் தேதி, அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பின்புறம் சுமார் 2,668 அடி உயர மலையில் இருந்து பாறை ஒன்று உருண்டு மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகர் 11-வது தெருவில் உள்ள வீடுகளின் அருகில் விழுந்தது.
இதில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகளில் மண் இறங்கியது. இதில் ஒரு வீட்டின் மீது நிலச்சரிவு ஏற்பட்டு முழுவதுமாக மூடியது. இதில் அந்த வீட்டில் இருந்த கணவன், மனைவி, அவர்களின் குழந்தைள் 2 பேர் மற்றும் கணவனின் அண்ணன் குழந்தைகள் 3 பேர் என்று மொத்தம் 7 பேர் சிக்கினர். இந்நிலையில் தீவிர போராட்டத்திற்கு பின்னர் நேற்று (டிச. 2) 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. பாறை விழுந்ததில் அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் உருக்குலைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த, குழந்தைகள் உள்ளிட்டோர் 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்த சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சேலம் கந்தம்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச. 3) நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், திருமணிமுத்தாற்றில் ஏற்பட்டுள்ள அடைப்பினை சீர் செய்யுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் உடல் நசுங்கி உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “7 பேர் உயிரிழப்புக்கு நான் மிகவும் வருந்துகிறேன். மழை வரும் என்று அறிந்தும் அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள் என பல மாவட்டங்களில் புயல் கடுமையாக தாக்கியுள்ளது. இந்த பகுதிகளில் கடும் சேதமும் ஏற்பட்டுள்ளன. எனவே தமிழ்நாடு அரசு, வெள்ள சேத பாதிப்புகளை ஆராய்ந்து மத்திய அரசை தொடர்பு கொண்டு பேரிடர் நிவாரணம் பெற்று பாதிக்கப் பார்த்த மக்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். திறமையற்ற முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் பல மாவட்ட மக்கள் மழை காரணமாக உறங்காமல் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?