TVK Maanadu: நான் வரேன்... தொண்டர்கள் வீசிய கட்சித் துண்டு... உற்சாகமாக கேட்ச் பிடித்த தலைவர் விஜய்!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு மேடையில் கெத்தாக என்ட்ரி கொடுத்த தலைவர் விஜய், தொண்டர்கள் முன்னிலையில் ரேம்ப் வால்க் சென்று மாஸ் காட்டினார். அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியையும் ஏற்றி வைத்தார் விஜய். அப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை இப்போது பார்க்கலாம்.
விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் கோலாகலமாக தொடங்கியது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடங்கப்பட்டது. அதன்படி 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது தமிழக வெற்றிக் கழக மாநாடு. அதேபோல், சரியாக 4 மணிக்கு தவெக மாநாட்டு மேடையில் என்ட்ரி கொடுத்த விஜய், முதலில் நிர்வாகிகளை சந்தித்து அவர்களுடன் கை குலுக்கினார்.
அதன் பின்னர் மாநாட்டு மேடையில் இருந்து நேர் எதிராக அமைக்கப்பட்டிருந்த நடை மேடையில், ரேம்ப் வால்க் சென்றார் விஜய். அவருக்கு பின்னால் 3 பவுன்சர்கள் அணிவகுக்க, தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி கெத்தாக நடை போட்டார் விஜய். அப்போது இருபக்கங்களில் இருந்து தொண்டர்கள் தவெக கட்சி துண்டுகளை விஜய்யை நோக்கி வீசி எறிந்தனர். அதனை விரட்டி விரட்டி கேட்ச் பிடித்த விஜய், தனது தோளில் போட்டுக்கொண்டார். சில துண்டுகள் கீழே விழுந்த போதும், அவைகளை தானே எடுத்து தனது தோளில் போட்டுக் கொண்டார் விஜய்.
அதன் பின்னர் மீண்டும் மாநாட்டு மேடைக்குச் சென்ற விஜய், கட்சியின் கொடியை ரிமோட் மூலம் ஏற்றி வைத்தார். 100 அடி உயர கொடி கம்பீரமாக பறக்கத் தொடங்கியதும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழியை பொருளாளர் வெங்கட்ராமன் வாசிக்க, தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர். அதன்படி, நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம். மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை. சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி. மதம். பாலினம். பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி. அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன் என தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழி வாசிக்கப்பட்டது.
உறுதிமொழியை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. தெருக்குரல் அறிவு, தவெக தலைவர் விஜய் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். இப்பாடலில் இடம்பெற்றுள்ள விஜய்யின் வாய்ஸ் ஓவர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள், வீரமங்கை வேலுநாச்சியார் ஆகியோர் வகுத்து தந்த Secular social justice ideologies உடன் நான் வரேன் என விஜய் பேசியுள்ளார். இந்நிகழ்ச்சிகளின் போது விஜய்யும் மேடைக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த அவரது பெற்றோரும் ஆனந்த கண்ணீர் வடித்தனர். தமிழக வெற்றிக் கழக மேடையில், தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், தலைமை கழகச் செயலாளர் ராஜசேகர், இணை கொள்கை பரப்புச் செயலாளர் தாகிரா ஆகியோருக்கு மட்டுமே இருக்கைகள் போடப்பட்டிருந்தன.
What's Your Reaction?