TVK Vijay: “விஜய் எனது நீண்டகால நண்பர்... அவரது புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்..” உதயநிதி ராக்கிங்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தற்போது நடைபெற்று வரும் நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Oct 27, 2024 - 20:40
 0
TVK Vijay: “விஜய் எனது நீண்டகால நண்பர்... அவரது புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்..” உதயநிதி ராக்கிங்!
தவெக தலைவர் விஜய்க்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் தளபதி விஜய், அரசியலில் களமிறங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள அவர், அதன் முதல் மாநில மாநாட்டில் தற்போது பிஸியாக காணப்படுகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் நடைபெறும் இந்த மாநாட்டில், லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வி.சாலையில் குவிந்துள்ள தவெக தொண்டர்களால், மாநாட்டுத் திடலே விழாக்கோலம் பூண்டுள்ளது.  

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு வெற்றிப்பெற, திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, பிரபு, சிபி சத்யராஜ், அர்ஜுன் தாஸ், ஜெயம் ரவி உள்ளிட்ட பலரும் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். இந்த வரிசையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் விஜய்க்கு வாழ்த்துக் கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலினிடம், தவெக மாநாடு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர். விஜய் எனது நீண்ட கால நண்பர், அவரது புதிய முயற்சிக்கு என் வாழ்த்துகள். நான் தயாரித்த முதல் படம் அவருடையது தான், நீண்ட வருடங்களாகவே அவரை எனக்கு நன்றாக தெரியும் என்றார். தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், எந்த கட்சியும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சட்டம் இல்லை. கட்சித் தொடங்க அனைவருக்கும் உரிமை உண்டு. இதற்கு முன் பல கட்சிகள் அரசியலுக்கு வந்துள்ளன பின்னர் காணாமல் போயுள்ளன. மக்கள் பணி தான் முக்கியம்... அவர்கள் யாரை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது தான் முக்கியம்... கொள்கைகள் முக்கியம்... மக்கள் பணியில் எப்படி ஈடுபடப் போகிறார்கள் என்பதுதான் முக்கியம் என்றார்.

விஜய் கட்சித் தொடங்கிய நாள் முதலே, இனிவரும் நாட்களில் அவருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே அரசியலில் கடும் போட்டி இருக்கும் என சொல்லப்பட்டது. இந்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow