முதல்நாள் முதல் காட்சி போல் நடந்த தவெக மாநாடு?... கட்டுப்பாடு இல்லாத ரசிகர்களால் தினறல்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்க சென்ற ரசிகர்கள், விஜய்யின் திரைப்படத்தை காணச் சென்றது போல நடந்து கொண்டதால், மாநாடு கட்டுப்பாடற்று காணப்பட்டது.
புதிதாக கட்சித் தொடங்கியுள்ள நடிகர் விஜய், தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் எனப் பெயரிட்டுள்ளார். அதன் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெற்று வருகிறது. விஜய்யின் இந்த மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.
விஜய் கட்சி தொடங்கிய வெகுநாட்கள் ஆன நிலையிலும், கட்சியின் கொள்கைகளை அறிவிக்காமல் இருந்தார். ஆனாலும், பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியது திராவிட அரசியலை தான் கையிலெடுக்கப் போகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தது. மாநாட்டு நுழைவு வாயிலில் அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோரின் பெரியளவிலான புகைப்படங்களை வைத்துள்ளார்.
இந்நிலையில், மாநாட்டில் கலந்து கொள்ள வருபவர்கள் 18 முதல் 30 வயது வரையிலான இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்றனர். அவர்கள் மதுவின் மயக்கத்திலும், போதைப் புழக்கத்திலும் வந்திருப்பதை காண முடிகிறது. போதைப் பொருட்களுக்கு அனுமதி இல்லை என்று கட்சி நிர்வாகம் அறிவித்திருந்தபோதும், மாநாட்டு திடலின் உள்ளேயே சிகரெட் உள்ளிட்ட பொருட்களின் விற்பனையை பார்க்க முடிந்தது. மேலும் சில இளைஞர்கள் மாநாட்டு திடலில் உள்ளே அமர்ந்து மது அருந்திய காட்சிகளை காண முடிந்தது.
மாநாட்டிற்கு வருகை புரிந்த அந்த இளம் விடலைகள், வாகனங்களின் மேற்கூரைகளின் மீதேறி பயணித்ததை பார்க்க முடிந்தது. இவர்களின் தேவையற்ற ஆரவாரங்களால், பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.
நேற்றும் அதேபோல், குழந்தைகளை தூக்கிக்கொண்டு சென்ற பெற்றோர்களை பார்க்க முடிந்தது. அதற்கு, ஒரு குழந்தை, ‘விஜய் மாமா’வை பார்க்க வந்திருக்கிறோம் என்று உற்சாகக் குரலில் சொன்னது. ஆனால், திடீரென்று மழை பொழிந்தாலோ அல்லது ஏதேனும் அசம்பாவிதம் நடந்தாலோ யார் பொறுப்பேற்பது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் நடந்துகொள்கிறார்கள்.
இன்னும் சிலர், மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகளின் மீது ஏறி குதித்து சென்றதை பார்க்க முடிந்தது. இவர்களை கட்டுப்படுத்துவது என்பது எளிதான விஷயம் கிடையாது. ஏனெனில், இவர்கள் எந்தவிதமான அரசியல் பயிற்சி இல்லாமல், விஜய் என்ற மனிதனினுக்கான ரசிகர் கூட்டம் மட்டும் தான்.
மாநாட்டிற்கு வந்திருந்த தொண்டர்கள் ஏதோ, விஜய் நடித்து வெளியாகும் திரைப்படத்தின் முதல் நாள், முதல் காட்சியை பார்க்க வந்தது போல ரசிக மனோபாவத்தோடு இருந்தார்களே தவிர, ஒரு கட்டுப்பாட்டோடான கட்சி மாநாட்டிற்கு வந்ததுபோல காணப்பட்டார்கள். சினிமாதனமாக ஹீரோயிசம் செய்வது போல நடந்து கொண்டார்கள்.
மாநாட்டிற்கு சென்றவர்களில் இதுவரை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 11 பேர் காயமடைந்துள்ளனர். இன்னும் மாநாடு முடிவதற்குள் என்ன என்ன காட்சிகளை காண போகிறோமோ என்று பெற்றோர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.
What's Your Reaction?