2025 ஐபிஎல் 18-வது சீசன் மார்ச் 23 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் மிகவும் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 14 வது லீக் போட்டி பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சின்னசாமி மைதானம்
நடப்பு சீசனில் ஆர்சிபி அணி தொடர்ந்து 2 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், குஜராத் அணியுடனான இன்றையப்போட்டியிலும், வெல்லும் எண்ணத்தில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பெங்களுரு அணி, நடப்பு தொடரில் முதன் முறையாக தங்களுடைய சொந்த மண்ணில் குஜராத் அணியை எதிர்கொள்வதால், இன்றையப்போட்டியிலும் வென்று ஹாட்ரிக் வெற்றியை பெறும் என்று ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
புள்ளிப்பட்டியலில் முதலிடம்
ரஜத் படிதார் தலைமையிலான பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ஐபிஎல் தொடக்கப்போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. தங்களுடைய 2-வது போட்டியில் சென்னையை எதிர்கொண்ட நிலையில், 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று 2.27 ரன்ரேட்டுடன் 4 புள்ளிகளைப்பெற்று ஆர்சிபி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு
ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்து 18 வருடங்கள் ஆன நிலையில், இதுவரை ஒருமுறைக்கூட கோப்பையை கைப்பற்றாத ஆர்சிபி அணி இம்முறை பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் தங்களது பலத்தை காட்டி தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. பலமான அணியாக இருப்பதால் இம்முறை ஈ சாலா கப் நம்தே என்ரு பெங்களுரு அணியின் ரசிகர்க்ள் ஆரம்பம் முதலே தங்களது ஆதரவை வழங்கி வருகின்றனர்.
ஐபிஎல் வரலாற்றில் பங்கேற்ற முதல் போட்டியிலேயே சாம்பியன் கோப்பையை வென்ற குஜராத் அணி நடப்பு சீசனில் தடுமாறி வருகிறது. டாப் ஆர்டரில் களமிறங்கும் பேட்ஸ்மேன்களை நம்பியே குஜராத் அணிகள் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதனால் தங்களுடைய பேட்டிங்கை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் குஜராத் அணி உள்ளது.
நேருக்கு நேர்
குஜராத் - பெங்களுரு அணிகள் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், ஆர்சிபி 3 முறை, குஜராத் 2 முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2024 சீசனில் மோதிய இரண்டுப்போட்டியிலும் ஆர்சிபி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.