முதல்வர் பதவிக்கான ரேஸ்.. EPS-க்கு அதிர்ச்சி அளித்த விஜய்: சி-வோட்டர் கருத்துக் கணிப்பு!

தமிழகத்தில் 2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அடுத்த முதலமைச்சராக யாருக்கு ஆதரவு உள்ளது?  என சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

Mar 29, 2025 - 18:19
 0
முதல்வர் பதவிக்கான ரேஸ்.. EPS-க்கு அதிர்ச்சி அளித்த விஜய்: சி-வோட்டர் கருத்துக் கணிப்பு!
c voter opinion poll

அடுத்தாண்டு இந்நேரம் ஒட்டுமொத்த தமிழகமும் தேர்தல் அனலில் கொதித்துக்கொண்டிருக்கும். அதன்படி, தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் இப்போது முதலே 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். கடந்த 57 ஆண்டுகளாகவே, தமிழகத்தில் அடுத்து ஆட்சிக்கு வருவது யார்? திமுகவா அல்லது அதிமுகவா என்ற கேள்வியோடு தேர்தல் களம் பரபரப்பாக காணப்பட்டது. ஆனால், இந்தமுறை விஜய்யும் தனது தமிழக வெற்றிக் கழகம் மூலம் தேர்தலை சந்திக்கவிருக்கிறார். அதேநேரம் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி ஒருபக்கமும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி மற்றொரு பக்கமும் அசுர பலத்துடன் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. 

இந்த நிலையில், 2026 தேர்தல் குறித்து சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு, அரசியல் கட்சிகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, மீண்டும் மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சராக வரவேண்டும் என 27 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராக வேண்டும் என 18 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் யாருமே எதிர்பாராத வகையில், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, 10 சதவீதம் பேர் மட்டுமே முதலமைச்சராக வர ஆதரவு கொடுத்துள்ளனர். அதேபோல், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, 9 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இரண்டாம் இடத்தில் விஜய்:

இந்த கருத்துக்கணிப்பின் அடிப்படையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களிடம் தொடர்ந்து ஆதரவு பெருகி வருவதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் முதன்முறையாக தேர்தலை சந்திக்கும் விஜய், முதலமைச்சர் ரேஸில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது, திமுக மட்டுமின்றி அதிமுக, பாஜகவினரையும் கலக்கம் அடைய செய்துள்ளது. 

இதனிடையே தமிழக அரசின் நடவடிக்கைகள் மிகவும் திருப்தியாக உள்ளதாக, 15 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர். 36 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி என்றும், 25 சதவீதம் பேர் திருப்தி இல்லை எனவும் கூறியுள்ளனர். முக்கியமாக 24 சதவீதம் பேர் இதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர். அதேபோல், முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் மிகவும் திருப்தியளிப்பதாக 22 சதவீதம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளனர். 33 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி என்றும், 22 சதவீதம் பேர் திருப்தியில்லை எனவும் கூறியுள்ளனர். 23 சதவீதம் பேர் இந்த கேள்விக்கு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் செயல்படுகள் மிகவும் திருப்தியளிப்பதாக, வெறும் 8 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 27 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி என்றும், 32 சதவீதம் பேர் திருப்தி இல்லை எனவும் கூறியுள்ளனர். 33 சதவீதம் பேர் இந்த கேள்விக்கு பதிலளிக்கவில்லை. அதேபோல், 15 சதவீதம் பேர், பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், 12 சதவீதம் பேர் விலைவாசி உயர்வு குறித்தும், 10 சதவீதம் பேர் மது, போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், 8 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்மை குறித்தும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு:

அதேபோல், சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்தும் பொதுமக்களிடம் கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், 16 சதவீதம் பேர் தங்கள் தொகுதி எம்.எல்.ஏகளின் செயல்பாடுகள் மிகவும் திருப்தி அளிப்பதாக கருத்துத் தெரிவித்துள்ளனர். 32 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி என்றும், 25 சதவீதம் பேர் திருப்தி இல்லை எனவும் வாக்களித்துள்ளனர். 27 சதவீதம் பேர் இந்த கேள்விக்கு பதிலளிக்கவில்லை. 

சமீபத்தில் நடந்த தவெக பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், இனிமேல் திமுக – தவெக இடையே தான் போட்டி எனக் கூறியிருந்தார். அதனை உறுதி செய்வது போல இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். தவெக தலைவர் விஜய்யின் அரசியல் அணுகுமுறை குறித்து பல்வேறுவிதமான விமர்சனங்கள் இருந்தாலும், பொதுமக்களிடம் அவருக்கு ஆதரவு பெருகி வருவது அக்கட்சியினருக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. அதேபோல், அதிமுக மீது பொதுமக்களுக்கு பெரியளவில் அதிருப்தி ஏற்பட, அக்கட்சி மீண்டும் பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என வெளியாகும் செய்திகளே காரணம் என, அரசியல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். முக்கியமாக இந்த சி வோட்டர் கருத்துக் கணிப்பில் சீமானின் நாம் தமிழர் கட்சி எந்தவிதத்திலும் மக்களின் ஆதரவை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow