’ஸ்பைடர் மேன்’ அடுத்த பாகத்தின் தலைப்பு இதுதான்.. படக்குழு அறிவிப்பு
’ஸ்பைடர் மேன்’ திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்கு ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ என்று தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஹாலிவுட் படங்களுக்கு என உலக அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதிலும், ஸ்பைடர் மேன் மற்றும் மார்வெல் படங்களுக்கு இந்திய மக்கள் இடையே அதிக வரவேற்பு உள்ளது. கற்பனை கதாபாத்திரமாக உருவாகிய ‘ஸ்பைடர் மேன்’ திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.
ஸ்பைடர் மேன் படங்களின் தொகுப்பு
கடந்த 2002-ஆம் ஆண்டு 'ஸ்பைடர் மேன்’, 2004-ஆம் ஆண்டு ‘ஸ்பைடர் மேன் 2’, 2007-ஆம் ஆண்டு ‘ஸ்பைடர் மேன் 3’, 2012-ஆம் ஆண்டு 'தி அமேசிங் ஸ்பைடர் மேன்’, 2014-ஆம் ஆண்டு ‘தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2’, 2017-ல் ‘ஸ்பைடர் மேன்: ஹோம் கமிங்’, 2019-ல் ‘ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம், கடைசியாக 2021-ல் ‘ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்’ போன்ற பல திரைப்படங்கள் வெளிவந்தன.
ஸ்பைடர் மேன் டைட்டில்
இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் ‘ஸ்பைடர் மேன்’ திரைப்படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ‘ஸ்பைடர் மேன்’ தொடர் படங்களில் நடித்து புகழ்பெற்ற டாம் ஹாலண்ட் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 31-ஆம் தேதி உலக அளவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?






