தவெக மாநாட்டில் முதல் ஆளாக என்ட்ரியான விஜய்யின் அம்மா, அப்பா... மேடையில் 5 இருக்கைகள் யாருக்கு..?
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், விஜய்யின் அம்மா ஷோபா, அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் இருவரும் முதல் ஆளாக மாநாட்டுத் திடலுக்கு வருகை தந்துள்ளனர்.
விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் கோலாகலமாக தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். நேற்றிலிருந்தே மாநாட்டுத் திடலில் தொண்டர்கள் குவியத் தொடங்கியதால் வி.சாலை முழுவதும் மக்கள் வெள்ளமாக காட்சியளிக்கிறது. இன்று காலை முதலே மாநாட்டுத் திடலில் என்ட்ரியான தொண்டர்கள், அங்கு போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமரத் தொடங்கினர். வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால், சிலர் அங்கிருந்த இருக்கைகளை தங்களது தலைக்கு மேல் தூக்கி வைத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல், குடிநீர் இல்லாமல் கழிவறைக்கு பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த தண்ணீரை தவெக தொண்டர்கள் குடிக்கும் சூழல் காணப்பட்டது. இன்னொரு பக்கம் மாநாட்டுத் திடலுக்கு வெளியே சிகரெட் விற்பனையும் படுஜோராக நடைபெற்று வந்தது. மேலும் தொண்டர்கள் பலர் மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வந்ததையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில், வெயிலின் தாக்கத்தால் 4 மணிக்கு தொடங்கவிருந்த மாநாடு ஒருமணி நேரம் முன்னதாக 3 மணிக்கே தொடங்கியது. தொண்டர்கள் கட்டுக்கடங்காமல் பேரிகார்டுகள் மேலே ஏறி மாநாட்டுத் திடலுக்குள் சென்றதால் பரபரப்பான சூழல் காணப்பட்டது. இதனையடுத்து மேடையேறிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தொண்டர்களை அமைதிகாக்கும்படி வலியுறுத்தினார்.
இதனிடையே விஜய்க்கு முன்னதாக அவரது அம்மாவும் அப்பாவும் மாநாட்டுத் திடலுக்கு என்ட்ரி கொடுத்தனர். சினிமா கரியர் முதல் அரசியல் வரை விஜய்க்கு மிகப் பெரிய சப்போர்ட்டாக இருந்தது அவரது அம்மாவும் அப்பாவும் தான். விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பதில், அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். 2009ம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்ட போது, அதன் கொடியை ஏற்றி வைத்தது எஸ்.ஏ சந்திரசேகர் தான். சில தினங்களுக்கு முன்னர் தவெக கொடி அறிமுக நிகழ்ச்சியிலும் எஸ்.ஏ.சி. ஷோபா இருவரும் கலந்துகொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டிலும் எஸ்.ஏ சந்திரசேகர், ஷோபா இருவரும் முதல் ஆளாக பங்கேற்றனர். அவர்களுக்கு மாநாட்டுத் திடலில் மேடைக்கு அருகில் இருக்கும் முதல் வரிசையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அதேபோல், மேடையில் மொத்தமே 5 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. இதில் தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட மேலும் 3 மிக முக்கிய நிர்வாகிகள் மட்டுமே அமரவுள்ளனர்.
What's Your Reaction?