எல்லை தாண்டி நுழைந்த பாகிஸ்தான் இராணுவத்தினர்.. பதிலடி கொடுத்த இந்தியா
எல்லை தாண்டி நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் இராணுவ வீரர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய இராணுவத்தினரும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக இந்திய இராணுவத்தினர் விளக்கமளித்துள்ளனர். அதில், “ பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காட்டி பகுதியில் ஏப்ரல் 1-ஆம் தேதி பாகிஸ்தான் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்தனர். இதில், கண்ணிவெடி வெடித்த நிலையில் பாகிஸ்தான் இராணுவத்தினர் இந்திய வீரர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய வீரர்களும் தாக்குதல் நடத்தினர்” என்று கூறினர். மேலும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் குறிப்பிட்ட பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் தரப்பில் எத்தனை வீரர்கள் காயமடைந்தனர் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, கதுவாவின் பஞ்ச்திர்த்தி பகுதியில் பயங்கரவாத நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் இந்திய இராணுவத்தினர் மற்றும் ஜம்மு -காஷ்மீர் காவலர்கள் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






