மகாராஷ்டிரா மாநிலம் தானே அம்பர்நாத் பகுதியில் செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றிற்கு நவநிர்மாண் சேனா கட்சித் தொண்டர்கள் சென்றுள்ளனர். அப்போது அந்த வங்கியின் மேலாளர் ஆங்கிலத்தில் பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நவநிர்மாண் சேனா கட்சித் தொண்டர்கள், மாநில மொழியான மராத்தியில் பேசுமாறு வங்கி மேலாளரை கட்டாயப்படுத்தி உள்ளனர்.
அதற்கு, அரசால் அனுமதிக்கப்பட்ட எந்த மொழியிலும் வங்கியில் பேசலாம் என்று வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும், உள்ளூர் மொழியை உடனடியாக கற்றுக் கொள்ள முடியாது என்றும் அதற்கு சிறிது நேரம் எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த நவநிர்மாண் சேனா கட்சித் தொண்டர்கள், மேஜையை தட்டி, கணினியை தள்ளிவிட்டு வங்கி மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் நவநிர்மாண் சேனா கட்சித் தொண்டர்கள் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, "அக்கட்சி தொண்டர்கள் ஒவ்வொரு வங்கி மற்றும் நிறுவனத்திற்கு சென்று அங்கு மராத்தி மொழி பயன்படுத்தப்படுகிறதா?" என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதன் ஒரு பகுதியாக அம்பர்நாத் பகுதியில் செயல்பட்டு வரும் வங்கியில் நுழைந்த அக்கட்சி தொண்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.