இந்தியா

ரமலான்: சமூகத்தில் கருணை உணர்வை அதிகரிக்கட்டும்.. பிரதமர் மோடி வாழ்த்து

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரமலான்: சமூகத்தில் கருணை உணர்வை அதிகரிக்கட்டும்.. பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் மோடி வாழ்த்து

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாத நோன்பாகும். அந்த வகையில் ரமலான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை உணவு, நீர் அருந்தாமல் இஸ்லாமியர்கள் நோன்பினை கடைப்பிடிப்பார்கள். 

ரமலான் மாதம் முதல் நாள் தொடங்கி தொடர்ச்சியாக 30 நாட்கள் இஸ்லாமியர்கள் இந்த நோன்பினை கடைப்பிடிப்பார்கள். அதுமட்டுமல்லாமல், இந்நாட்களில்  மற்றொரு கடமையான ஏழை எளியோருக்கு ஜகாத் என்னும் உதவிகளை வழங்குவார்கள். ரமலான் 30 நோன்புகள் முடிவடைந்த பின்னர் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் ரமலான் பண்டிகையை கொண்டாடுவர்கள்.

ரமலான் சிறப்பு தொழுகை

அந்த வகையில் இன்று நாடு முழுவதும் ரமலான் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்கள் அதிகாலை தொழுகை முடிந்த பின்னர் புத்தாடை அணிந்து ஈதுல் பித்ர் என்னும் ரமலான் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். 

ரமலான் சிறப்பு தொழுகையை திறந்தவெளி திடல்களில் தொழுவது கூடுதல் சிறப்பு என்பதால் பல்வேறு பகுதிகளில் திடல்களிலும், பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டதுடன் ஒவ்வொருவரையும் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்து தெரிவித்தனர்.

பிரதமர் மோடி வாழ்த்து

ரமலானையொட்டி இஸ்லாமியர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரமலான் வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள். இந்த பண்டிகை நமது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் கருணை உணர்வை அதிகரிக்கட்டும். உங்கள் அனைத்து  முயற்சிகளிலும் மகிழ்ச்சியும் வெற்றியும் கிடைக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.