இந்தியா

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்!

பெட்ரோல், டீசல் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகத் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா? இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்!
Indian Oil
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு, இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வந்துவிடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. இதன் விளைவாக, தமிழகத்தில் பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதுடன், வதந்திகளால் செயற்கையான தட்டுப்பாடு உருவாகும் சூழலும் ஏற்பட்டது.

வதந்திகளை நம்ப வேண்டாம்

இந்த நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகத் தெளிவுபடுத்தியுள்ளது. அனைத்து எரிபொருள் நிலையங்களும் வழக்கம்போல் செயல்படும் என்றும், விநியோக நடவடிக்கைகள் எவ்விதத் தடையுமின்றிச் சீராக நடைபெற்று வருவதாகவும் அந்த நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

நிதானம் காக்க வேண்டுகோள்

பொதுமக்கள் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் ஆதாரமற்ற வதந்திகளை நம்பி அச்சப்பட வேண்டாம் என்றும், பெட்ரோல் பங்குகளில் தேவையற்ற கூட்டத்தைத் தவிர்க்குமாறும் இந்தியன் ஆயில் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. எரிபொருள் இருப்பு தாராளமாக உள்ளதால், மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.