சில நாட்களுக்கு முன் மேற்கு வங்கத்தின் தலைநகரமான கொல்கத்தாவில் பணியில் இருந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப்படிப்பு படித்து வந்த 31வயதான பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த சம்பவத்திற்கு நீதி கோரி நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. சமூக வலைதளங்களில் கூட #JusticeFor என ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இது போன்ற சம்பவங்கள் பெண்களுக்கு மத்தியில் ஒரு பயம் கலந்த கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், மகாராஷ்டிராவில் நடந்த இதேபோன்ற ஒரு சம்பவத்தில் பெண் துணிச்சலாக செயல்பட்டதால் அவர் பாராட்டை பெற்று வருகிறார்.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் 26 வயதான ஒரு பெண் வசித்து வருகிறார். இவருக்கு பக்கத்து வீட்டில் தான் 30 வயதான அனில் சத்யநாராயணன் வசித்து வருகிறார். மாலை வேலையில் போதையில் வந்த அனில், பக்கத்து வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணிடம் தவறாக நடந்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.
அனிலின் இந்த நடவடிக்கையை பார்த்து பதட்டமான அப்பெண் தன்னை காத்துக்கொள்ள சத்தமிட்டவாறு, சமையலறைக்கு ஓடியுள்ளார். ஆனால், அங்கும் சென்று அனில் தன்னுடைய அந்தரங்க உறுப்பை காட்டி பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதனால், கடும் ஆத்திரத்திற்கு ஆளான அப்பெண் சமையலறையில் இருந்த தோசை கரண்டியை எடுத்து, அனில் சத்யநாராயணின் அந்தரங்க உறுப்பிலேயே அடித்துள்ளார். இதனால், வலி தாங்க முடியாமல், வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்த அனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இதுகுறித்து அப்பெண் புகாரளித்ததால், பிவண்டி போலீசார் அனில் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இக்கட்டான சூழலிலும் தன்னை தற்காத்துக்கொள்ள துணிச்சலாக செயல்பட்ட அப்பெண்ணுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்தியாவில் இப்படியான சம்பவங்கள் தொடர்ந்து நடக்க, பாலியல் குற்றங்கள் பற்றி சமீபத்தில் வெளியான ரிப்போர்ட் தற்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை ஒரு ஆண்டுக்கு 400க்கு மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் பணியிடங்களில் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது.
இந்த தரவுகளை சுட்டிக்காட்டி பணியிடம், வீடு, சாலை என எங்குமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், இந்த நிலை எப்போது மாறும் எனவும் இனி பாலியல் குற்றங்களுக்கு பெண்களை பழி கூறுவதை விட்டுவிட்டு, குற்றவாளிக்கு தண்டனை பெற்று கொடுக்க வேண்டும் எனவும் பெண்கள் தங்களுடைய கருத்தை பதிவு செய்துவருகின்றனர்.