முல்லை பெரியாறு அணை உடைந்தால் யார் பொறுப்பு?.. கேரளாவுக்கு சக்தி இல்லை.. சுரேஷ் கோபி ஆதங்கம்

முல்லை பெரியாறு அணை உடைந்தால் யார் பொறுப்பேற்பது என்றும் இன்னொரு பேரழிவை எதிர்கொள்ளும் சக்தி கேரளாவுக்கு இல்லை என்றும் நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

Aug 19, 2024 - 14:44
Aug 19, 2024 - 15:10
 0
முல்லை பெரியாறு அணை உடைந்தால் யார் பொறுப்பு?.. கேரளாவுக்கு சக்தி இல்லை.. சுரேஷ் கோபி ஆதங்கம்
முல்லை பெரியாறு அணை உடைந்தால் யார் பொறுப்பு என சுரேஷ் கோபி கேள்வி

கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் இடைவிடாமல் கொட்டிய கனமழை காரணமாக வைத்திரி தாலுகாவிற்குட்பட்ட மேப்பாடி, முண்டகை மற்றும் சூரல்மலை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் கட்டடங்கள், அங்கு இருந்த பள்ளிகள், வீடுகள் என அனைத்தும் அப்படியே மண்ணுக்குள் புதையுண்டன.

வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மண்ணில் புதையுண்டு தூக்கத்திலேயே உயிரை பறிகொடுத்தனர். மேலும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர். நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட கிராமங்களில் இருந்து தொடர்ந்து தோண்டத் தோண்ட சடலங்கள் மீட்கப்பட்டு வருவது ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசின் பேரிடர் மீட்புப் படைகள், இந்திய ராணுவம் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து விடாமுயற்சியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வயநாடு நிலச்சரிவால் ஏற்பட்ட அச்சத்தை தொடர்ந்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாற்றில் புதிய அணைக் கட்ட வேண்டும் என்று கேரளாவில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களுக்கு இடையே அவ்வப்போது பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை காரணம் காட்டி அங்கு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா அரசு நிலைப்பாடு எடுத்துள்ளது.

இதற்கிடையில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதலங்களில் இதற்கான பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன. மேலும், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட வேண்டும் என கேரள மக்களும், அம்மாநில அரசியல்வாதிகளும் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். வலைதளங்களில் இதற்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் மத்திய துணை கண்காணிப்பு குழு அணை பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு மத்திய குழுவிற்கு அறிக்கை தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் மத்திய குழு முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது. மேலும், கடந்த ஜூலை மாதம், மத்திய நீர்வள துணைக் கண்காணிப்புக் குழுவினர் அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகரும், மத்திய பெட்ரோலியம், சுற்றுலாத்துறை இணை மந்திரியுமான சுரேஷ் கோபி, “சமீபத்தில் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கவலை எழுப்பும் சமூக வலைதளப் பதிவு ஒன்றை பார்த்தேன். அணை இடிந்து விழுமா, இல்லையா என்ற கேள்வி என் மனதில் ஏற்படுகிறது.

ஒருவேளை அணை உடைந்தால் யார் பொறுப்பு? அணையில் தண்ணீர் நிரப்புவதில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் பொறுப்பேற்குமா? அல்லது அந்த உத்தரவுகளை அமல்படுத்தும் அதிகாரிகள் பொறுப்பேற்பார்களா? விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்விக்கு பதில் வேண்டும். மீண்டும் ஒரு மிகப்பெரிய பேரழிவை எதிர்கொள்ளும் சக்தி கேரளாவுக்கு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow